விபத்தில் சிக்கிய SAG மெய்வல்லுனர் அணித் தலைவி நிமாலி

141

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை மெய்வல்லுனர் அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ள 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான நிமாலி லியனாஆரச்சி இன்று (28) காலை திடீர் விபத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SAG செல்லும் மெய்வல்லுனர்களுக்கு விசேட உடற்தகுதி பரிசோதனை

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் ………

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் அதிகளவு பதக்கங்களை வென்றெடுக்கின்ற போட்டியாக மெய்வல்லுனர் காணப்படுவதுடன், இம்முறை 66 வீர வீராங்கனைகள் இலங்கை சார்பாக குறித்த போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், மெய்வல்லுனர் பெண்கள் அணியின் தலைவியான நிமாலி லியனாஆரச்சி இன்று (28) காலை பயிற்சிகளுக்காக தனது மோட்டார் சைக்கிளில் மைதானத்துக்கு வருகை தந்து கொண்டிருந்த போது திடீர் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவருடைய வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016இல் இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிமாலி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர், 1500 மீற்றர் மற்றும் 4X400 அஞ்சலோட்டம் ஆகியவற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட இருந்தார்

இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் சகல விளையாட்டுகளுக்குமான வீர வீராங்கனைகள் நாளை (29) நேபாளம் நோக்கி பயணமாகவுள்ளனர். இதில் மெய்வல்லுனர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களும் அடங்கும்.

இதன்படி, மெய்வல்லுனர் வீராங்கனை நிமாலிக்கு இன்று காலை முகங்கொடுக்க நேரிட்ட இந்த திடீர் விபத்தினால் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்ற முடியாது போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவருக்குப் பதிலாக மாற்று வீராங்கனையொருவர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க தகுதிபெற்ற அனைத்து வீரர்களுக்குமான விசேட உடற்தகுதி தேர்வு நேற்றுமுன்தினம் (26) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது

SAG மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்த சப்ரின், சண்முகேஸ்வரன் மற்றும் சபான்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் …………

இதில் முப்பாய்ச்சல் வீராங்கனை விதூஷா  லக்ஷானி, 110 மீற்றர் சட்டவேலி ஓட்ட வீரர் ரொஷான் ரணதுங்க, 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்ட வீராங்கனை கௌஷல்யா மதுஷானி ஆகிய 3 வீரர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் கலந்து கொண்டிருந்ததாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்திருந்தது.

இதன்படி, குறித்த மூன்று வீரர்களுக்கும் இன்று (28) காலை விசேட உடற்தகுதி தேர்வுக்கு தோற்றி இருந்ததுடன், இதில் ரொஷான் ரணதுங்க மற்றும் கௌஷல்யா மதுஷானி ஆகிய இருவரும் உடற்தகுதி தேர்வை பூர்த்தி செய்ததாகவும், உபாதைக்குள்ளாகிய விதூஷா  லக்ஷானியின் பங்குபற்றல் இன்னும் உறுதியாகவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<