இலங்கை தொடருக்கான இந்தியா குழாம் அறிவிப்பு!

Sri Lanka tour of India 2023

573

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான இந்திய குழாம்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய ஒருநாள் குழாத்தின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதுடன், T20I போட்டிகளுக்கான தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

7 வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷ் செல்லும் இங்கிலாந்து

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான T20I மற்றும் ஒருநாள் தொடர்கள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முதலில் T20I போட்டிகள் நடைபெறும் என்பதுடன், அதனைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியில் முக்கிய மாற்றமாக ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிவந்த சிக்கர் தவான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தவறியதன் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவருடன், ரிஷப் பண்ட் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்படவில்லை.

T20I போட்டிகள் முதலில் நடைபெறவுள்ள நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, மொஹமட் சிராஜ், மொஹமட் சமி, கே.எல்.ராஹுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சிரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்தில் மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளனர்.

T20I குழாத்தை பொருத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களான முகேஷ் குமார் மற்றும் சிவம் மாவி ஆகியோர் முதன்முறையாக இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் ராஹுல் திருப்பாதி, ருத்ராஜ் கைகவட், சஞ்சு சம்சன், தீபக் ஹூடா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் T20I குழாத்தில் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா T20I போட்டிகளில் தலைவராக செயற்படுவதோடு, உப தலைவராக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான இரண்டு குழாம்களிலும் சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இசான் கிஷன், வொசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், உம்ரான் மலிக் மற்றும் அர்ஷ்டீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான T20I தொடர் ஜனவரி 3ம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளதுடன், 2வது போட்டி 5ம் திகதியும் (பூனே), 3வது போட்டி 7ம் திகதியும் (ராஜ்கோட்) நடைபெறவுள்ளன. இதனைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் ஜனவரி 10ம் திகதி குவாஹடியில் ஆரம்பமாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகள் ஜனவரி 12 மற்றும் 15ம் திகதிகளில் முறையே கொல்கத்தா மற்றும் திருவானந்தபுரத்தில் நடைபெறவுள்ளன.

T20I குழாம்

ஹர்திக் பாண்டியா (தலைவர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், இசான் கிஷன், வொசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், உம்ரான் மலிக், அர்ஷ்டீப் சிங், ருத்ராஜ் கைகவட், தீபக் ஹூடா, ராஹுல் திருப்பாதி, சஞ்சு சம்சன், ஹர்ஷல் பட்டேல், சிவம் மாவி, முகேஷ் குமார்

ஒருநாள் குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), ஹர்திக் பாண்டியா, விராட் கோஹ்லி, கே.எல். ராஹுல், சிரேயாஸ் ஐயர், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், இசான் கிஷன், வொசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், உம்ரான் மலிக், அர்ஷ்டீப் சிங், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<