திசர பெரேராவின் அதிரடி சதத்தால் இலங்கை A அணிக்கு வெற்றி

1870

அணித் தலைவர் திசர பெரேராவின் அதிரடி சதத்தின் உதவியோடு பங்களாதேஷ் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை A அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதன் மூலம் முதல் போட்டியில் போராடி தோற்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்து தொடரை தக்கவைத்துக் கொண்டது. இரு அணிகளுக்கும் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை (21) சில்ஹட்டில் நடைபெறவிருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது.

பங்களாதேஷ் A அணியிடம் போராடித் தோற்ற இலங்கை A அணி

சில்ஹட்டில் இன்று (19) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும் ஓட்டம் பெறும் முன்னரே இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த அனுபவ வீரர் லஹிரு திரிமான்ன டக் அவுட் ஆனார்.

மறுமுனையில் உபுல் தரங்க இரண்டாவது விக்கெட்டுக்கு அஷான் பிரியஞ்சனுடன் இணைந்து 58 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். தென்னாபிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஒரு பயிற்சியாக இந்த தொடரில் ஆடும் தரங்க 51 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இலங்கை A அணியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இலங்கை ஒரு சந்தர்ப்பத்தில் நெருக்கடியை சந்தித்தது. பிரியஞ்சன் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் இளம் வீரர் ஷம்மு அஷான் (10), தசுன் ஷானக்க (17) மற்றும் ஷெஹான் ஜயசூரிய (12) வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி 121 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. இந்நிலையில் களமிறங்கிய அணித் தலைவர் திசர பெரேரா ஒருமுனையில் அதிரடியாக ஆடி ஓட்டங்களை வேகமாக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மறுமுனையில் பின்வரிசை வீரர்களான மினோத் பானுக்க மற்றும் மலிந்த புஷ்பகுமார ஒற்றை இலக்கத்துடன் தமது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

எனினும் ஒருமுனையில் வேகமாக ஓட்டங்களை குவித்து வந்த திசர பெரேரா 9ஆவது விக்கெட்டுக்கு ஷெஹான் மதுஷங்கவுடன் இணைந்து 44 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொள்ள இலங்கை A அணி 250 ஓட்டங்களை எட்டியது.

மதுஷங்க 36 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 36 ஓட்டங்களை பெற்றார்.

இதன்போது தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் முதல் சதத்தை பெற்ற திசர பெரேரா 88 பந்துகளில் 9 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 111 ஓட்டங்களை குவித்தார். திசர பெரேரா ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் A நிலை போட்டிகளில் இதற்கு முன்னர் சதம் பெற்றதில்லை.

பந்துவீச்சில் பங்களாதேஷ் A அணி சார்பில் 8 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் 17 வயதுடைய வலதுகை சுழல் பந்து வீச்சாளரான நயீம் ஹசன் 10 ஓவர்களையும் பந்துவீசி 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். ஷபியுல் இஸ்லாம் மற்றும் சுன்சமுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிங்கிய பங்களாதேஷ் A அணிக்கு எந்த வீரரும் நின்றுபிடித்து ஆடவில்லை. பங்களாதேஷ் ஒருநாள் அணியின் அனுபவ வீரர் சௌம்யா சார்கர் 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததோடு மறுமுனை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சைப் ஹசனினால் 28 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

மத்திய வரிசையில் வந்த வீரர்கள் ஸ்திரமாக ஆடி ஓட்டங்களை அதிகரித்தபோதும் ஒருவரும் பெரிய ஓட்டங்களை நோக்கி செல்லவில்லை. அல் அமின் நிதானமாக ஆடி 46 ஓட்டங்களை பெற்றார். அணித் தலைவர் மொஹமது மிதுன் (25), சாகிர் ஹஸன் (32) மற்றும் ஆரிபுல் ஹக் (27) ஆகியோரின் விக்கெட்டுகளை முக்கியமான நேரங்களில் வீழ்த்துவதற்கு இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தது.

இந்நிலையில் பங்களாதேஷ் A அணியின் பின்வரிசை வீரர்களின் விக்கெட்டுகள் வேகமாக பறிபோக அந்த அணி 44.2 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அனுபவ சுழல் வீரர் மலிந்த புஷ்பகுமார 9 ஓவர்களுக்கும் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். வலதுகை சுழல் பந்து வீச்சாளரான 20 வயதுடைய நிஷான் பீரிஸ் 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது திசர பெரேராவுக்கு கிடைத்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A – 275 (49.4) – திசர பெரேரா 111, உபுல் தரங்க 44, ஷெஹான் மதுஷங்க 36, நயீம் ஹசன் 3/42, சுன்சமுல் இஸ்லாம் 2/21, ஷொரிபுல் இஸ்லாம் 2/74

பங்களாதேஷ் A – 208 (44.3) – அல் அமின் 46, சாகிர் ஹஸன் 32, ஆரிபுல் ஹக் 27, மலிந்த புஷ்பகுமார 3/32, நிஷான் பீரிஸ் 3/39

முடிவு – இலங்கை A அணி 67 ஓட்டங்களால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<