அபிஷேக், எபனேசர் அசத்த யாழ் மத்தியை இலகுவாக வென்ற சென் ஜோன்ஸ்

180

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 15 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட, ஒருநாள் நான்கு இன்னிங்சுகளை கொண்ட போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் மத்திய கல்லூரி அணியினை இலகுவாக வென்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் சம்பியன்களான முடிசூடிக்கொண்டனர். 

நேற்றைய தினம் (30) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இந்த போட்டியானது மைதானத்தின் ஈரத்தன்மை காரணமாக பதினொரு மணியளவிலேயே ஆரம்பமாகியிருந்தது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் அணியின் தலைவர் அபிஷேக், மத்திய கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்தார். மத்திய கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அஐய் மற்றும் சிமிலியன் நிதானமான ஆரம்பத்தினை வழங்கியபோதும், கிந்துசன் முதலாவது விக்கெட்டினை தகர்க்க, சென் ஜோன்ஸ் அணியின் தலைவர் அபிஷேக் தொடர்ந்து வந்த வீரர்களை விரைவாக ஆடுகளத்திலிருந்து வெளியேற்றினார். 

மாலிங்க தலைமையிலான இளம் அணி வெற்றி வாகை சூடுமா?

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று…

அபிஷேக்கின் பந்துவீச்சில் தடுமாறிய மத்திய கல்லூரியினர் 40.5 ஓவர்களை எதிர்கொண்டு வெறுமனே 93 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். 

பந்துவீச்சில் பிரகாசித்த அபிஷேக்  39 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென். ஜோன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யுகேந்திரா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும், இரண்டாவது விக்கெட்டிற்காக இணைந்த சச்சின், எபனேசர் ஜோடி எபனேசரின் அரைச்சதத்தின் துணையுடன் மத்திய கல்லூரி முதலாவது இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கையினை விட முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணியினருக்கு சச்சின் அரைச்சதத்தினை கடந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய எபனேசர் சதம் பெறுவார் என எதிர்பார்த்தபோதும் 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மத்திய கல்லூரிக்காக பந்துவீச்சில் சோபித்த எட்வின் 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். 

39.2 ஓவர்களில் 169 ஓட்டங்களை பெற்றிருக்கையில் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. முதலாவது இன்னிங்சில் புள்ளிகளடிப்படையில் போட்டியில் வெற்றி பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியினர் சம்பியன் கிண்ணத்தினையும் தமதாக்கினர். 

சென் ஜோன்ஸ் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி அணிகள் பங்குபற்றும் 17 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 95 (40.5) – அஜய் 26, அபிலாஜ் 24, அபிஷேக் 6/39 

சென். ஜோன்ஸ் கல்லூரி – 169/4 (39.2) – எபனேசர் 91, சச்சின் 55, நியூட்டன் 3/33 

போட்டி முடிவு – முதலாவது இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி 

விருதுகள் 

  • ஆட்ட நாயகன் – அன்ரன் அபிஷேக் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – எபனேசர் ஜசியல் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – அன்ரன் அபிஷேக் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் – போல் பரம தயாளன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)
  • எதிரணியின் சிறந்த வீரர் –  அஜய் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<