ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையிலிருந்து 13 பேர்

148

தாய்லாந்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 13 வீர, வீராங்கனைகளைக் கொண்ட இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

25ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் இம் மாதம் 12ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை தாய்லாநதின் தலைநகர் பாங்கொக்கில் அமைந்துள்ள சுபசலாசாய் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது 

தாய்லாந்தில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். மேலும் ஆசிய மெய்வல்லுனர் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்முறை போட்டித் தொடர் வெகு விமர்சையாக நடத்தப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இந்த நிலையில், ;ம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையிலிருந்து 13 பேர் கொண்ட அணியொன்று இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 வீரர்களும், 8 வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர் 

இதில் அருண தர்ஷன, ரஜித ராஜகருணா, காலிங்க குமாரகே, பபசர நிக்கு, பசிந்து லக்ஷான் கொடிகார ஆகிய 4 வீரர்களும், நதீஷா, ராமநாயக்க, கயன்திகா அபேரத்ன, தருஷி கருணராத்ன, சயுரி லக்ஷிமா மெண்டிஸ், நிஷேந்த்ரா பெர்னாண்டோ, சாரங்கி சில்வா, ரந்தி ஹிமாஷா குறே, நதீஷா தில்ஹானி லேக்கம்கே ஆகிய 8 வீராங்கனைகளும் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.    

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள 5 வீரர்களும் ஆண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்டம் மற்றும் 4x400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் களமிறங்கவுள்ளனர் 

இவர்களில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஆசிய கனிஷ்ட சாதனைக்கு சொந்தக்காரராகிய அருண தர்ஷனவும், 400 மீட்டரில் தேசிய சம்பியனாகிய காலிங்க குமாரகேவும் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளதுடன், குறித்த போட்டி நிகழ்ச்சியில் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது 

கடந்த மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற 10ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட அருண தர்ஷன, அதிசிறந்த நேரப் பெறுமதியுடன் 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தினார் 

அதேபோல, கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 400 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றதுடன், குறித்த போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார் 

இதனிடையே, இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை வீராங்கனைகளில் பதக்கம் வெல்கின்ற ஒருசில முன்னணி வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.   

2017இல் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் 2019இல் கத்தாரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷப் ஆகியவற்றில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கயன்திகா அபேரத்ன, கடந்த மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 4x400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்ற இளம் வீராங்கனை தருஷி கருணாரத்ன ஆகிய இருவரும் இலங்கைக்கு பதக்கங்கள் வென்று கொடுக்கக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது 

இதில் சிறப்பம்சம் என்னவெனில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஆசிய தரவரிசையில் தருஷி கருணாரத்ன முதலிடத்திலும், கயன்திகா அபேரத்ன 2ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில், 2017 ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற 36 வயதுடைய நதீஷா டில்ஹானி லேகம்கே இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்கின்ற வீராங்கனைகளில் ஒருவராக பார்க்கப்படுகின்றார் 

பெண்களுக்கான நீளம் பாய்தலில் தேசிய சம்பியனான சாரங்கி டி சில்வா, பெண்களுக்கான 400 மீட்டரில் முன்னாள் தேசிய சம்பியனான நதீஷா ராமநாயக ஆகிய இருவரும் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது 

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், 100 மீட்டரில் தெற்காசிய சாதனைக்குச் சொந்தக்காரருமான யுபுன் அபேகோன், அண்மையில் ஏற்பட்ட உபாதைக்காக சிகிச்சைப் பெற்று வருவதால் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பை தவறவிடவுள்ளார்.   

அதேபோல, அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் தேசிய சம்பியனான உஷான் திவங்க பெரேரா உபாதை காரணமாகவும், பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டல் தேசிய சம்பியனான நிலானி ரத்நாயக ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்காலிகமாக போட்டித் தடைக்குள்ளாகிய காரணத்தினால் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றவில்லை 

50 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் அங்குரார்ப்பண அத்தியாயம் (1973), 4ஆவது (1981) மற்றும் 5ஆவது அத்தியாயம் (1983) ஆகியவற்றைத் தவிர்ந்த மற்றைய எல்லா ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களிலும் இலங்கை பங்குபற்றியுள்ளது. இதுவரை இலங்கை 19 தங்கப் பதக்கங்கள், 18 வெள்ளிப் பதக்கங்கள், 21 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தமாக 58 பதக்கங்களை வென்றுள்ளது 

இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை 2 வெண்கலப் பதக்கங்களை மாத்திரம் வென்றமை குறிப்பிடத்தக்கது 

இதனிடையே ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றவுள்ள இலங்கைக் குழாம் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது 

இலங்கை மெய்வல்லுனர் குழாம் விபரம் 

ஆண்கள்  

  • அருண தர்ஷன (400 மீட்டர், 400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம்) 
  • காலிங்க குமாரகே (400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம்) 
  • ரஜித ராஜகருணா (400 மீட்டர், 400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம்) 
  • பபசர நிகு (400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம்) 
  • பசிந்து கொடிகார (400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4கலப்பு அஞ்சலோட்டம் 

பெண்கள் 

  • நதீஷா ராமநாயக்க (400 மீட்டர், 400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம் 
  • கயன்திகா அபேரத்ன (800 மீட்டர், 1500 மீட்டர்) 
  • தருஷி கருணாரத்ன (800 மீட்டர், 400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம்) 
  • சயுரி லக்ஷிமா மெண்டிஸ் (400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம்) 
  • நிஷேந்த்ரா பெர்னாண்டோ (400x4 மீட்டர் அஞ்சலோட்டம், 400x4 கலப்பு அஞ்சலோட்டம்) 
  • சாரங்கி சில்வா (நீளம் பாய்தல்) 
  • ரந்தி ஷிமாஷா குறே (முப்பாய்ச்சல்) 
  • நதீகா தில்ஹானி லேகம்கே (ஈட்டி எறிதல்) 

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<