ஐக்கிய அரபு இராச்சியத்துடனான T20 தொடரை கைப்பற்றிய நேபாள அணி

90
Nepal vs UAE
Image Courtesy - ICC

சுற்றுலா நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான  போட்டியில், நேபாள அணி 14 ஓட்டங்களால் ஐக்கிய அரபு இராச்சிய வீரர்களை தோற்கடித்திருந்ததோடு மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

டுபாயில் இன்று (3) ஆரம்பமான இந்தப் போட்டி மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராச்சிய அணியின் தலைவர் மொஹமட் நவீட், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நேபாள வீரர்களுக்கு வழங்கினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான T20 தொடரை சமன் செய்த நேபாளம்

சுற்றுலா நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையே துபாய் நகரில்..

இதன்படி முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

நேபாள அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதன் தலைவர் பராஸ் கட்கா 14 பந்துகளில் 29 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பந்துவீச்சில் அமீர் ஹயாட் மற்றும் அணித்தலைவர் மொஹமட் நவீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட  105 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி குலாம் சபீர் மற்றும் சய்மான் அன்வர் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியினால் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டது.

அதன்படி, ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து நல்ல நிலையில் காணப்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அணி சடுதியான முறையில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறத் தொடங்கியது.

இந்த தடுமாற்றம் தொடர்ந்தும் நீடித்த நிலையில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 10 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே குவித்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் துடுப்பாட்டத்தில் சிறந்த ஆரம்பத்தினை தந்திருந்த சய்மான் அன்வர் 20 பந்துகளில் 30 ஓட்டங்களையும், குலாம் சபீர் 25 ஓட்டங்களையும் குவித்திருக்க ஏனைய அனைத்து வீரர்களும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இதேநேரம் நேபாள அணியின் பந்துவீச்சில் KC கரண், அவினாஷ் போஹரா மற்றும் லலித் ராஜ்பன்ஷி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக நேபாள அணியின் KC கரண் தெரிவு செய்யப்பட, தொடர் நாயகன் விருதினை நேபாள அணியின் ஏனைய வீரர்களில் ஒருவரான அவினாஷ் போஹரா வென்றார்.

>> தலை உபாதை பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ள குசல் பெரேரா

தற்போது ஐக்கிய அரபு இராச்சிய அணியுடனான T20 தொடரை கைப்பற்றியிருக்கும் நேபாள அணி, முன்னதாக ஐக்கிய அரபு இராச்சிய அணியுடன் இடம்பெற்ற ஒரு நாள் தொடரையும் 2-1 என வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

நேபாளம் – 104/8 (10) – பராஸ் கட்கா 29(14), சுந்தீப் ஜோரா 28(11), மொஹமட் நவீட் 6/2(2), அமீர் ஹயாட் 16/2(2)

ஐக்கிய அரபு இராச்சியம் – 90/8 (10) – சய்மான் அன்வர் 30(20), குலாம் சபீர் 25(15), KC கரண் 13/2(2), அவினாஷ் போஹரா 16/2(2), லலித் ராஜ்பன்ஷி 16/2(2)

முடிவு – நேபாள அணி 14 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<