ஆப்கான் ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Afghanistan Tour of Sri Lanka 2024

385

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர்கொண்ட உத்தியோகபூர்வ குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கண்டி பல்லேகலவில் நாளை (09) ஆரம்பமாகவுள்ள இந்த தொடருக்காக பெயரிடப்பட்ட குழாத்தின் தலைவராக தொடர்ந்தும் குசல் மெண்டிஸும், உதவி தலைவராக சரித் அசலங்க செயற்படவுள்ளனர்.

ஆனால், இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடிய முன்னாள் தலைவர் தசுன் ஷானக, அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மற்றொரு சகலதுறை வீரரான சாமிக்க கருணாரத்ன அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாமிக்க கருணாரத்ன இறுதியாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தசுன் ஷானவிற்கு பதில் வீரராக இலங்கை அணியில் இடம்பிடித்து 3 போட்டிகளில் விளையாடியிருந்தார். எனினும், எனினும், கடந்த மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வேயுடனான தொடரில் அவர் இடம்பெறவில்லை.

அதேபோல, டெங்கு காய்ச்சல் காரணமாக ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை தவறவிட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மீண்டும் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய சுழல்பந்து வீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சே, கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்காக பெயரிட்டப்பட்ட இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜிம்பாப்வேக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த மத்திய வரிசை வீரர் நுவனிந்து பெர்னாண்டோவிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இவர்கள் தவிர, ஜிம்பாப்வேக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த மற்ற அனைத்து வீரர்களும், ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் ஒருநாள் அணியில் தங்கள் இடத்தைத் தக்கவைத்துள்ளனர்.

அதேநேரம், ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை தவறவிட்ட சிரேஷ்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய மூவரும் ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரிலும் இடம்பெறவில்லை.

ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விபரம்:

குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க (உதவித் தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, ஷெவோன் டேனியல், ஜனித் லியனகே, சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<