மூன்று வருடங்களில் முதல் வைட்வொஷ் வெற்றிக்காக இலங்கை அணி

1468

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை  இலங்கை அணி இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. 

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் இலங்கை அணிக்கு, இந்த ஒருநாள் தொடர் வெற்றி சிறந்த ஆரம்பமாகும். 

அவிஷ்க பெர்னாந்துவின் அதிரடியுடன் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் ……

மறுமுனையில், சில முக்கிய வீரர்கள் இல்லாத பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரை பறிகொடுத்து இலங்கை சுற்றுப் பயணத்தில் ஏமாற்றத்தை பெற்றிருக்கின்றது.  

இவ்வாறாக இரண்டு அணிகளும் சாதக பாதங்களை பெற்ற நிலையில், இந்த ஒருநாள் தொடரில் மீதமாக இருக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (30) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி 

இலங்கை அணியின் வீரர்களுக்கு பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடர் வெற்றி மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கின்றது. இந்த ஒருநாள் தொடரில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி, பங்களாதேஷ் அணியுடனான இறுதிப் போட்டியினை அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த நுவன் குலசேகரவிற்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை அணி இந்த ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பங்களாதேஷ் அணியினை 3-0 என வைட்வொஷ் செய்து ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் புள்ளிகளிலும் முன்னேற்றம் காண எதிர்பார்த்திருக்கின்றது. 

இலங்கை அணியைப் பொறுத்தவரை கடைசியாக 2016ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராகவே ஒருநாள் தொடரொன்றில் வைட்வொஷ் வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, நாளைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை அணிக்கு 3 வருடங்களின் பின்னர் முதலாவது வைட் வொஷ் வெற்றியொன்று காத்திருக்கின்றது. 

இலங்கை வரும் நியூசிலாந்து அணியுடன் இணையும் திலான் சமரவீர

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை …….

கடைசி ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியினை நோக்கும் போது, அதில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்றே கூற முடியும். ஏனெனில், அனைத்து கோணங்களிலும் மிகவும் சமநிலையான இலங்கை அணியே தற்போது காணப்படுகின்றது.

பங்களாதேஷ் அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குமான இலங்கை அணியில் இடம்பெறாத அதிரடி சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவிற்கு கடைசி போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட முடியும் எனக் கூறப்படுகின்ற போதிலும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன. எனினும், ஷானக்க அவ்வாறு இலங்கை அணியில் இணையும் போது மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவிற்கு கடைசி போட்டியில் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை வழமைபோன்று திமுத் கருணாரத்ன, அவிஷ்க பெர்னாந்து ஆகியோரினால் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன இந்த ஒருநாள் தொடரில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்க தவறிய போதிலும் இலங்கை அணிக்காக சிறந்த துடுப்பாட்ட ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக அமைந்திருந்தார். 

அதேநேரம், இலங்கை அணியின் மத்திய வரிசைக்கு குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் பெறுமதி சேர்க்க எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

மயிரிழையில் உலகக் கிண்ணத்தை இழந்த …….

இதேவேளை, தனன்ஞய டி சில்வா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுத்துறையினை பலப்படுத்த நுவன் பிரதீப், லஹிரு குமார மற்றும் இசுரு உதான ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக வலுச்சேர்க்கவுள்ளனர். 

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி 

திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), அவிஷ்க பெர்னாந்து, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, தனன்ஞய டி சில்வா, அகில தனன்ஜய, லஹிரு குமார, நுவன் பிரதீப், இசுரு உதான

பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் அணிக்கு சகீப் அல் ஹஸன், லிடன் தாஸ் மற்றும் மஷ்ரபி மொர்தஸா ஆகியோர் இந்த ஒருநாள் தொடரில் இல்லாமல் போனது மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கின்றது. குறிப்பாக, சகீப் அல் ஹஸன் மற்றும் லிடன் தாஸ் போன்றோர் இல்லாமல் போனது இந்த ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை வெகுவாக பாதித்திருந்தது. இதனால், இரண்டு போட்டிகளிலும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரினையும் இழந்திருக்கின்றது. 

தற்போது இந்த ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்க்கும் பங்களாதேஷ் அணிக்கு, கடைசிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் பெறுமதி சேர்க்கும் முக்கிய வீரர்களாக முஷ்பிகுர் ரஹீம், தமிம் இக்பால் மற்றும் மஹமதுல்லா ஆகியோர் காணப்படுகின்றனர்.

Photo Album  : Sri Lanka practice session ahead of 3rd ODI

இதில் முஷ்பிகுர் ரஹீம் நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அரைச்சதங்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் தமிம் இக்பால், மஹமதுல்லா ஆகியோர் இந்த ஒருநாள் தொடரில் ஜொலிக்காது போயிருந்தாலும் அவர்களின் அனுபவம் பங்களாதேஷ் அணிக்கு எப்போதும் வலுச்சேர்க்கும் விடயமாக இருக்கும் என கருதப்படுகின்றது.

இதேநேரம், பங்களாதேஷ் அணிக்கு முஸ்தபிசுர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம் ஆகியோர் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களாக இருக்க மெஹிதி ஹஸன், மற்றும் தய்ஜூல் இஸ்லாம் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக  காணப்படுகின்றனர். அதேநேரம், மொஸாதிக் ஹொஸைன் மேலதிக துடுப்பாட்டவீரராக தனது தரப்பிற்கு வலுச்சேர்க்கவுள்ளார்.

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் அணி 

தமிம் இக்பால் (அணித் தலைவர்), சௌம்யா சர்க்கார், மொஹமட் மிதுன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, மொஸாதிக் ஹொஸைன், சப்பீர் ரஹ்மான், மெஹிதி ஹஸன், தய்ஜூல் இஸ்லாம், சபியுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான் 

எதிர்பார்ப்பு வீரர்கள்

திமுத் கருணாரத்ன (இலங்கை) – இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய அணித்தலைவராக மாறிவரும் திமுத் கருணாரத்ன கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அடுத்து துடுப்பாட்டத்தில் சிறந்த பதிவுகளைக் காட்டத்தவறியிருக்கின்றார். எனினும், உறுதியான ஆரம்பத்தை காட்டும் திறமை கொண்ட திமுத், நாளைய போட்டியில் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரராக இருக்கின்றார். 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு ஆறு தொடர்கள்

ஆரம்பத்தில் கிரிக்கெட் எனும் விளையாட்டு………

முஷ்பிகுர் ரஹீம் (பங்களாதேஷ்) – கிரிக்கெட் உலகக் கிண்ணம் அடங்கலாக ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமையினை வெளிப்படுத்தியிருந்த முஷ்பிகுர் ரஹீம் இந்த ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட நங்கூரமாக காணப்படுகின்றார். 

இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தன்னுடைய எட்டாவது ஒருநாள் சதத்தை வெறும் 2 ஓட்டங்களால் தவறவிட்ட முஷ்பிகுர் ரஹீம் இலங்கை அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றார். 

மைதான நிலைமைகள் பற்றி

இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளும், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலேயே நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த மைதானத்தில் இரண்டு ஒருநாள் போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருக்கின்றதன் காரணமாக தொடரின் கடைசிப்போட்டிக்கான ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<