ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண அரையிறுதியில் இலங்கை

AHF Cup 2022

124

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணத்தில் (AHF Cup) தங்களுயை மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை ஹொக்கி அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

இலங்கை ஹொக்கி அணி இன்று (15) நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கஷகஸ்தான் அணியை எதிர்கொண்டு 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

>>பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் கிழக்கின் நட்சத்திரங்கள்

குறித்த இந்தப்போட்டியில் இலங்கை அணிக்காக, இஷாங்க தொரனகல (15வது நிமிடம்), தம்மிக்க ரணசிங்க (23,53வது நிமிடங்கள்) மற்றும் சுரேஸ் ரத்நாயக்க (43வது நிமிடம்) ஆகியோர் கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.

இந்தவார ஆரம்பத்தில் இலங்கை அணியானது, உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என வீழ்த்தியதுடன், தாய்லாந்து அணியை 6-2 என வீழ்த்தியிருந்தது. எனவே, இன்றைய வெற்றியுடன் குழு ஏ யில் முதலிடத்தை தக்கவைத்து, அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டது. அரையிறுதிப்போட்டி எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

அரையிறுதியில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள அணி இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. குழு பி யில் போட்டிகள் (ஓமான், பங்களாதேஷ், ஈரான், இந்தோனேசியா, சிங்கபூர்) நிறைவடைந்த பின்னரே இலங்கை அணி எதிர்த்தாடவுள்ள அணி தொடர்பில் உறுதிசெய்யப்படும்.

நடைபெற்றுவரும் இந்த போட்டித்தொடரானது ஆசிய கிண்ணத்துக்கான தகுதிச்சுற்றாக அமைந்துள்ளது. எனவே, இந்த தொடரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் ஆசிய கிண்ணத்துக்கு நேரடி தகுதியை பெற்றுள்ள இந்தியா, ஜப்பான், கொரியா, மலேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் ஆசிய கிண்ணத்தில் மோதும். குறித்த இந்த தொடரில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், 2023ம் ஆண்டு இந்தியாவின் ஒடிசாவில் நடைபெறும் ஹொக்கி உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறும்.

இலங்கை அணி நடைபெற்றுவரும் இந்த தொடரில் கடந்த 2016ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த போதும், கிண்ணத்தை தவறவிட்டிருந்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்தப்போட்டியில் 3-0 என இலங்கை அணி தோல்வியடைந்திருந்தது.

>>மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு<<