இலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி குறித்து முறைப்பாடு

129

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக உரிமை அனுசரணைக்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை தனிப்பட்ட ஒருவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிட எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் நேற்றைய தினம் (10) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான ஒளிபரப்பு உரிமைகள் தொடர்பான பணத்தை நிதிப் பிரிவின் பிரதானி ஒருவர் வெளிநாடொன்றிலுள்ள வங்கிக்கணக்கு ஒன்றிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் முறையிட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு பிரதானி ஒருவரினால் மேற்கொள்ளவிருந்த இந்த மோசடி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து வெளியிடுகையில்,

”இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான ஒளிபரப்பு உரிமைகள் தொடர்பான பணத்தை நிதிப் பிரிவின் பிரதானி ஒருவர் வெளிநாடொன்றிலுள்ள தனிப்பட்ட வங்கிக்கணக்கு ஒன்றிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். குறித்த ஒளிபரப்பு உரிமையை பெற்றுக்கொண்டுள்ள சொனி (Sony) தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து 5.5 மில்லியன்களை அந்த நபர் பெற்றுக்கொண்டு, அதை பிறிதொரு வங்கிக் கணக்குக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். எனவே நிதி மோசடி பிரிவிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் இந்த மோசடி தொடர்பிலான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்” என தெரிவித்த அமைச்சர், பொலிஸ்மா அதிபருக்கு இதுதொடர்பில் விசேட கவனம் செலுத்தி விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் தான் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா கருத்து வெளியிடுகையில், ”இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இவ்வாறான பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ளமை இலங்கை கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவ்வாறானதொரு மோசடியொன்று இடம்பெறுவதற்கு முன் எம்மால் அதை கண்டுபிடிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒளிரபரப்பு உரிமை தொடர்பான நிதியில் இடம்பெறவிருந்த மோசடியை முற்றுமுழுவதும் தடுத்து நிறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குப் பிரிவு முடக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க