புதிய பயணம்: ரஷ்யாவில் இருந்து கண்டிக்கு, கண்டியில் இருந்து கொழும்புக்கு

1321

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நிறைவுக்கு வந்த ஒரு நாள் போட்டித் தொடரில் இறுதியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளின் முடிவில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை தந்த இலங்கை ரசிகர்கள், பார்வையாளர் அரங்கில் உள்ள குப்பைகளை அகற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளிட்ட பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (12) நிறைவுக்குவந்த ஐந்தவாதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியின் முடிவில் போட்டியைப் பார்வையிட வந்த இலங்கை ரசிகர்கள் பார்வையாளர் அரங்கில் இருந்த குப்பைகளை சேகரித்து ஓரிடத்தில் குவித்து மீண்டும் முழு உலகின் கவனத்தையும் பெற்றுக்கொண்டனர்.

தனஞ்சயவின் மிரட்டும் பந்துவீச்சால் இலங்கைக்கு இமாலய வெற்றி

பந்துவீச்சில் அகில தனஞ்சயவும் துடுப்பாட்டத்தில்..

முன்னதாக கடந்த 05ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில், 78 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்த இலங்கை அணி, ஒரு நாள் தொடரையும் 0-3 என இழந்தது. எனினும், இலங்கை அணியின் தோல்வியால் மனமுடைந்த இலங்கை ரசிகர்கள் போட்டியின் பின்னர் பார்வையாளர் அரங்கில் வீசப்பட்டிருந்த குப்பைகளையெல்லாம் அகற்றி, ஓரிடத்தில் குவித்துவிட்டுச் சென்றனர். இலங்கை ரசிகர்கள் செய்த இந்த காரியம் அன்றைய தினம் இரவே சமுகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

அதனைத்தொடர்ந்து கடந்த 08ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெற்ற 4ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக அவ்வப்போது தடைப்பட்டது. எனினும், திஸர பெரேரா மற்றும் தசுன் சானக்கவின் அபார ஆட்டத்தின் உதவியுடன் குறித்த போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

பல்லேகலையில் குப்பைகளை அகற்றிய பல்கலைக்கழக மாணவர்கள்

நள்ளிரவு கடந்து முடிவுக்கு வந்த இந்தப் போட்டியின் பிறகும் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் வீசப்பட்ட உணவு பொதிகள், பிளாஸ்டிக் போத்தல்கள், காகிதங்கள் மற்றும் ஏனைய குப்பைகளை சேகரித்து ஓரிடத்தில் குவித்து தாம் இருந்த பிரதேசத்தை சுத்தம் செய்துவிட்டுச் சென்றனர்.

இவ்வாறு பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது ஒரு நாள் போட்டிகளின் முடிவில் குப்பைகள் அகற்ற முக்கிய காரணமான, போட்டியை பார்வையிட வந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களே, முன்னோடிகளாகச் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தோல்வியின் பின்னரும் உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கை ரசிகர்கள்

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான…

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னரும் கொழும்பு வந்த கிரிக்கெட் ரசிகர்களும் குப்பைகளை ஒழுங்குபடுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

எதுஎவ்வாறாயினும், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என இலங்கை அணி இழந்த போதிலும், கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளும் முடிவடைந்த பிறகு ரசிகர்கள் மைதானத்தை இவ்வாறு சுத்தம் செய்த விடயம் கிரிக்கெட் உலகில் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது.

இவ்வாறு, இலங்கை இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

  • பிரேமதாஸ மைதானத்தில் குப்பைகளை ஓரப்படுத்தியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள்

இதேவேளை, இலங்கை ரசிகர்களின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையையும், ஏனைய நாடுகளையும் சேர்ந்தவர்கள் சமூகவலைத்தளங்கள் ஊடாக தமது பாராட்டுக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை இரசிகர்களின் இந்த செயற்பாட்டை வெகுவாக பாராட்டியுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், குறும்படமொன்றையும் பிரத்தியேகமாக தயாரித்து வெளியிட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகிய பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் குழு நிலைப் போட்டியில் செனகல் மற்றும் ஜப்பான் ரசிகர்கள், போட்டியின் பின்னர் மைதானத்திலிருந்த குப்பைகளை சுத்தம் செய்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.

இதனையடுத்து, பலமிக்க பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஐரோப்பாவின் பிரபல நாடான பெல்ஜியத்தை ஆசிய நாடான ஜப்பான் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

முதல் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றிருந்த ஜப்பான், அதன்பின் 3 கோல்களை விட்டுக்கொடுத்து மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த தோல்வியை தாங்க முடியாத ஜப்பான் வீரர்கள் கதறி அழுதனர். மேலும் போட்டியை நேரில் பார்வையிட வந்த ரசிகர்களும் அழுதார்கள்.

ஆர்ஜென்டீனா, ஜேர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரபல அணியாக விளங்கிய பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து கால்பந்து ரசிகர்களின் அன்பை பெற்ற ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷ்ய மொழியில்நன்றி” என்று ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தனர். இதேபோல், போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் தோல்வியின் விரக்தியில் இருந்தாலும், பார்வையாளர் அரங்கை சுத்தம் செய்த பின்னரே அங்கிருந்து வெளியேறினர்.

இவ்வாறு ஜப்பான் ரசிகர்களும், வீரர்களும் முன்மாதிரியாக நடந்துகொண்ட சம்பவம் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்ததுடன், அவர்களும் அதே முன்மாதிரியை மைதானங்களுக்குச் சென்று செய்வதற்கு கடைபிடிக்க ஆரம்பித்தார்கள்.  

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடருக்கு ஐசிசி அங்கீகாரம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்த திட்டமிட்டிருந்த, “ஆப்கானிஸ்தான்..

எனவே, முழு உலகத்தையே கவர்ந்த இவ்வாறான முன்மாதிரியை இலங்கை வீரர்களும் கடந்த மாதம் செய்து காட்டினார்கள். இலங்கை அணி வீரர்கள், அண்மையில் பங்களாதேஷுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த போது, சில்ஹெட்டில் நடைபெற்ற இறுதி ஒரு நாள் போட்டியின் பிறகு வீரர்களுக்கான அறையை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டு ஆங்கிலத்தில் நன்றி என தெரிவித்து விட்டு நாடு திரும்பியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இறுதியாக, மைதானங்களுக்குச் சென்று குப்பைகளை ஒழுங்குபடுத்திச் செல்வதை தற்போது வழக்கத்திற்கு கொண்டுள்ள இலங்கை ரசிகர்கள், தத்தமது வீடுகளில் உள்ள குப்பைகளையும் இவ்வாறு ஒழுங்குபடுத்தி, உரிய இடங்களில் போடுவதற்கான வழக்கத்தையும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் சுற்றாடலை நேசிக்கும் ஆர்வலளர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் அண்மைக்காலமாக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள குப்பை பிரச்சினைக்கு இதுவரை எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்தினாலோ, தனியார் அமைப்புகளினாலோ முன்வைக்கப்படவில்லை. இதன் காரணமாக குப்பைகளை பாதைகளிலும், மருங்குகளிலும் போடுவதை மக்கள் காலம் காலமாக செய்து வருகின்றார்கள்.

எனவே, இந்த நடைமுறையினை மாற்றுவதற்கு, மைதானத்தில் இலங்கை ரசிகர்கள் எவ்வாறு முன்மாதிரியாக இருந்தார்களோ, அதேபோன்றதொரு தீர்வு திட்டமொன்றை அரசாங்கம் பெற்றுக்கொடுக்குமாயின் இலங்கையின் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுடன், உலகில் உள்ள அழகிய நாடுகளில் ஒன்றாகவும் இலங்கை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<