பாண்டியா உட்பட மூன்று வீரர்கள் ஆசிய கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்

583

ஆசிய கிண்ணத்தின் நேற்று (19) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதையால் மைதானத்திலிருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா முழுத் தொடரிலும் இருந்து விலகியுள்ளார் என இந்திய கிரிக்கெட் சபை  (பிசிசிஐ)அறிவித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் அக்ஷயர் பட்டேல் மற்றும் ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சர்துல் தாகூர் ஆகியோரும் உபாதை காரணமாக ஆசிய கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என பிசிசிஐ மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது. எனினும் குறித்த இந்த போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்த விடயம் ஹர்திக் பாண்டியாவின் உபாதையாகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இலகு வெற்றி

ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது மோதலாக …

நேற்றைய போட்டியில் 18வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, தனது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசிவிட்டு, மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் சென்று பார்வையிட்டனர். எனினும் ஹர்திக் பாண்டியா வலி காரணமாக ஆடுகளத்திலிருந்து எழவில்லை. அவரது முதுகுப் பகுதியில கடுமையான உபாதை ஏற்பட்டிருந்ததால் அவர்ஸ்டெச்சர்மூலமாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது ஹர்திக் பாண்டியா, இந்திய கிரிக்கெட் அணியின் வைத்தியக் குழாமின் மூலமாக சிகிச்சைப் பெற்று வருகின்றார். எனினும் அவரால் ஆசிய கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாது என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு பதிலாக தீபக் சஹார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பமாகிறது ஆறு நாடுகள் மோதும் ரெட்புல் பல்கலைக்கழக T20

ரெட்புல்லின் அனுசரணையில் சர்வதேசத்தின் எட்டு சிறந்த …

ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தப்படியாக, நேற்று களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அக்ஷர் பட்டேலும் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். இவரின் ஆள்காட்டி விரல் உபாதை ஏற்பட்டிருந்தது. போட்டிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரின் ஆள்காட்டி விரலின் தசைநாரில் காயம் ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக அவரும் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, ஹொங்கொங் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு பின்னர், வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூருக்கு இடுப்பி்ல் உபாதை ஏற்பட்டதாகவும், அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு, மாற்று வீரராக சித்தார்த் கௌல் இணைக்கப்பட்டுள்ளார் என்பதையும் இந்திய கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மாற்று வீரர்களாக பெயரிடப்பட்ட தீபக் சஹார், ரவீந்திர ஜடேஜா மற்றும் சித்தார்த் கௌல் ஆகியோர் இன்று இந்திய அணியின் பயிற்சியில் இணைந்துக்கொள்ளவுள்ளனர்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.