முதன்முறையாக CPL சம்பியனாகிய பிராவோவின் சென் கிட்ஸ்!

CPL 2021

135
CPL Twitter

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவந்த கரீபியன் பிரமீயர் லீக் (CPL) தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற, சென் கிட்ஸ்  மற்றும் நெவிஸ் பிரிட்டோரியர்ஸ் அணி முதன்முறையாக சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டது.

அன்ரே பிளச்சர் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை, டுவைன் பிராவோ தலைமையிலான சென் கிட்ஸ்  மற்றும் நெவிஸ் பிரிட்டோரியர்ஸ் அணி இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது.

புதிய T20 வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காட்டிய குயின்டன் டி கொக்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை, ரகீம் கொர்ன்வல் 43 ஓட்டங்கள், ரொஸ்டன் சேஸ் 43 ஓட்டங்கள் மற்றும் கீமோ போல் 21 பந்துகளில் வேகமாக 39 ஓட்டங்கள் எனப் பெற்று அணிக்கு கைகொடுத்தனர். சென் கிட்ஸ்  மற்றும் நெவிஸ் பிரிட்டோரியர்ஸ் அணியின் சார்பில் பவாட் அஹ்மட் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், ஆரம்பித்த இந்தப்போட்டி மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கெயில் ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க, எவின் லிவிஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜோஷ்வா டி சில்வா 37 ஓட்டங்களையும், ஷெர்பன் ரதபோர்ட் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, சென் கிட்ஸ்  அணி 95 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், இதற்கு அடுத்தப்படியாக களமிறங்கிய டொமினிக் டார்க்ஸ் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி, சென் கிட்ஸ்  மற்றும் நெவிஸ் பிரிட்டோரியர்ஸ் அணி தங்களுடைய முதல் கிண்ணத்தை வெற்றிக்கொள்வதற்கு உதவினார். இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில், இறுதிப்பந்தில் டொமினிக் டார்க்ஸின் உதவியுடன் சென் கிட்ஸ்  அணி வெற்றியை பதிவுசெய்தது.

டொமினிக் டார்க்ஸ் 24 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, இவருக்கு உதவியாக பெபியன் எலன் 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி சார்பாக வஹாப் ரியாஸ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சென் கிட்ஸ்  மற்றும் நெவிஸ் பிரிட்டோரியர்ஸ் அணி முதன்முறையாக CPL கிண்ணத்தை வெற்றிக்கொண்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக ரொஸ்டன் சேஸ் தெரிவுசெய்யப்பட, இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை டொமினிக் டார்க்ஸ் வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…