மோசமான பந்துவீச்சால் வீழ்ந்த ஸ்கந்தவரோதயா, கொழும்பு இந்து அணிகள்!

U19 Schools Cricket Tournament 2022/23

51
 

இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று வியாழக்கிழமை (22) நடைபெற்ற போட்டிகளில் யாழ். ஸ்கந்தவரோதயா, யாழ். இந்து மற்றும் பம்பலப்பட்டி இந்துக் கல்லூரிகள் தோல்விகளை சந்தித்தன.

ஸ்கந்தவரோதயா கல்லூரியானது மொறட்டுவை மெதடிஸ்ட் கல்லூரி அணியை எதிர்கொண்டதுடன், யாழ். இந்துக் கல்லூரியானது டி ல சலே கல்லூரியையும், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை அணியையும் எதிர்கொண்டன.

>> பிலியந்தலை மத்தியக் கல்லூரிக்கு எதிராக போராடி தோற்றது சென். ஜோன்ஸ்!

மெதடிஸ்ட் உயர் பாடசாலை மொறட்டுவை எதிர் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி

தெஹிவளை ஜயசிங்க கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மெதடிஸ்ட் உயர் பாடசாலை அணிக்கு எதிரான போட்டியில் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி 261 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெவின் அஞ்சனவின் அபார சதம் மற்றும் மத்தியவரிசை வீரர்களின் பங்களிப்புகளின் உதவியுடன், முதலில் துடுப்பெடுத்தாடிய மெதடிஸ்ட் கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 395 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கெவின் அஞ்சன 122 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 21 பௌண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்களை குவிக்க, நவீன் மதுசங்க பெரேரா 73 ஓட்டங்கள், சதுன் தரங்க பெர்னாண்டோ 57 ஓட்டங்கள் மற்றும் திசர ஜயங்க பீரிஸ் 52 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் எம். பிரணவன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சீறான இடைவௌிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததன் காரணமாக 37.3 ஓவர்கள் நிறைவில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி சார்பாக ஜே. கௌரிசங்கர் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, மெதடிஸ்ட் கல்லூரி அணியின் பந்துவீச்சில் அகில டில்ரக் மற்றும் ஆகாஷ் நிம்ஷார சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  • மெதடிஸ்ட் கல்லூரி மொறட்டுவை – 395/6 (50), கெவின் அஞ்சன 162, மதுசங்க பெரேரா 73, தரங்க பெர்னாண்டோ 57, திசர ஜயங்க பீரிஸ் 52, எம்.பிரணவன் 37/2
  • யாழ். ஸ்கந்தவோராதயா கல்லூரி – 134/10 (37.1), ஜே. கௌரிசங்கர் 34, அகில டில்ரக் 27/2, ஆகாஷ் நிம்ஷார சில்வா 22/2, சதுன் தரங்க பெர்னாண்டோ 10/2
  • முடிவு – மெதடிஸ்ட் கல்லூரி அணி 261 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை எதிர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு எதிரான போட்டியில் ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி மிகச்சிறந்த வெற்றியொன்றினை பதிவுசெய்துள்ளது.

தங்களுடைய சொந்த மைதானத்தில் இந்துக் கல்லூரியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்து 426 ஓட்டங்களை குவித்தது.

ஹரித தினேந்திர வெறும் 46 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தினுக ஆலோக 83 ஓட்டங்கள், கனிஷ்க துலக்ஷன 67 ஓட்டங்கள் என ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை அணி வீரர்கள் ஓட்டங்களை குவிக்க, பி. தாருஜன் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரிக்கு துடுப்பாட்ட வீரர் பி. ஸ்ரீ நிதுஷான் வேகமான ஓட்டக்குவிப்பை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தபோதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறிய காரணமாக, இந்துக் கல்லூரி அணி 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் யசித செமால் 4 விக்கெட்டுகளையும், தெயித் மிஹிரங்க 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  • ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை – 426/10 (48.3), ஹரித தினேந்திர 106, தினுக ஆலோக 83, கனிஷ்க துலக்ஷன 67, பி. தாருஜன் 51/4
  • பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி – 136/10 (22.1), ஸ்ரீ நிதுஷான் 70, யசித செமால் 44/4, தெயித் மிஹிரங்க 42/3
  • முடிவு – ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை 290 ஓட்டங்களால் வெற்றி

டி லா சலே கல்லூரி எதிர் யாழ். இந்துக் கல்லூரி

யாழ். இந்துக் கல்லூரிக்கு எதிரான போட்டியில் டி லா சலே கல்லூரி அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் அமான் 100 ஓட்டங்களையும், பின்வரிசையில் களமிறங்கிய ஜேரம் திலின 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள டி லா சலே கல்லூரி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ். இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒட்டுமொத்தமாக தடுமாற, 28 ஓவர்கள் நிறைவில் வெறும் 83 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்துக் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக எஸ்.சுபர்ணன் 16 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பந்துவீச்சில் ஹேசான் அனுருத்த, தரிந்து ஹிமாஷ மற்றும் இமேஷ பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  • டி லா சலே கல்லூரி – 240/6 (50), மொஹமட் அமான் 100, ஜேரம் திலின 50, எஸ். சுபர்ணன் 34/2, டி. கஜனாத் 41/2, சுபாந்தன் அர்ஜன் 48/2
  • யாழ். இந்துக் கல்லூரி – 83/10 (28), எஸ்.சுபர்ணன் 16, ஹேசான் அனுருத்த 2/2, இமேஷ பெரேரா 14/2, தரிந்து ஹிமாஷ 19/2
  • முடிவு – டி லா சலே கல்லூரி 157 ஓட்டங்களால் வெற்றி

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<