நான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு

740

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நிலவி வருகின்ற முறுகல் நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இலங்கை அணியின் முக்கிய நான்கு சிரேஷ்ட வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த சனிக்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடினார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற இவ்விசேட சந்திப்பில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவர் லசித் மாலிங்க, முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் சகலதுறை வீரர் திசர பெரேரா ஆகிய வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை அணியின் தலைமைத்துவத்தை விமர்சித்துள்ள திசர பெரேரா

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆரம்பமாகவுள்ள ….

குறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை அணியில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால், அணிக்குள் பிளவு ஏற்படாமல் ஓரணி என்ற உணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விடயம் தொடர்பிலும் ஆலோசனை கேட்டுள்ளார்.

மேலும், மாலிங்கவுக்கும், திசரவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இருவரிடமும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் விளையாட்டுத்துறை அமைச்சர் அஞ்செலோ மெதிவ்ஸிடம் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் மீண்டும் ஒருமுறை அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாலிங்க – திசர – மெதிவ்ஸை ஒரே மேசையில் சந்திக்கவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சிரேஷ்ட வீரர்களான ….

கடந்த வருட இறுதியில் இலங்கைநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன நடைபெற்றன. இவ்விரண்டு தொடர்களையும் நியூசிலாந்து அணி 1-0, 3-0 என இலங்கையை வெற்றி கொண்டிருந்தது.  

எனினும், குறித்த தொடருக்காக இலங்கை அணி அங்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன் இலங்கை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்பட்டார். இந்த நிலையில், அசந்த டி மெல் தலைமையிலான தெரிவுக் குழு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் அணித் தலைவராக லசித் மாலிங்கவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, நியூசிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா மாத்திரம் அபாரமாக விளையாடி சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார்.

எனினும், திசர பெரேரா தொடர்பில் இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவி கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்தையடுத்து, திசர பெரேராவின் மனைவியும் அதற்கு பதிலடி கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் பெரும் வார்த்தைப்போர் இடம்பெற்றது. இவ்வாறு இரண்டு சிரேஷ்ட வீரர்களினதும் மனைவிமார் தமது கணவனுக்காக சமூக வலைத்தளங்களில் படுமோசமாக அவதூறுகளை தெரிவித்துக் கொண்டிருக்க, மறுபுறத்தில் இலங்கை அணி வீரர்கள் மத்தியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொண்ட ஒழுக்க விசாரணையின் போது குறித்த விடயம் தொடர்பில் இரண்டு வீரர்களும் மன்னிப்பு கோரியிருந்ததுடன், அணியின் ஒற்றுமையைப் பேணுவதாகவும், மேலும் பிரச்சினைகளை வளர்க்கப் போவதில்லை எனவும் கூறியதையடுத்து அவர்களுக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி திசர பெரேரா நீண்ட கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.  

அந்தக் கடிதத்தில் அணியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் மாலிங்க செயற்படுவதாகவும், அவரால் அணிக்கு ஆபத்து எனவும் சுட்டிக்காட்டியதுடன், உலகக் கிண்ணத்துக்கு முன் அவரது தலைமைப் பதவியை மாற்றவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

இதனையடுத்து அணிக்குள் மிகப் பெரிய குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதனை உணர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க ஆகியோரை கடந்த 30ஆம் திகதி வெவ்வேறாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  

இந்த சந்திப்பில் முதலில் அஞ்செலோ மெதிவ்ஸை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து உரையாடிய விளையாட்டுத்துறை அமைச்சர், தற்போதை அணியின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க

அண்மைக் காலமாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட ….

அதனைத்தொடர்ந்து தற்போதைய ஒருநாள் மற்றும் டி-20 அணித்தலைவரான லசித் மாலிங்கவை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர், நியூசிலாந்து தொடர் குறித்து கேட்டறிந்ததுடன், அணியின் தற்போதைய நிலை குறித்து விசாரித்துள்ளார்.

அத்துடன், நின்றுவிடாமல் தனது சொந்த செலவில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பார்வையிட கென்பரா சென்ற அவர், அங்குள்ள இலங்கை வீரர்களை சந்தித்து அணிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதேபோல, அங்குள்ள .பி.சி வானொலி நிலையத்திற்கு அமைச்சர் வழங்கிய செவ்வியில், மாலிங்க, மெதிவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோரை ஒரே மேசையில் வைத்து சந்தித்து இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்து வீரர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதேநேரம், வீரர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<