சசெக்ஸ் கழகத்தில் இணையும் இலங்கையின் முன்னாள் பயிற்றுநர்

268
Grant Flower

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் பிளவர், இங்கிலாந்தின் கவுண்டி அணிகளில் ஒன்றான சசெக்ஸ் கழகத்தின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான பயிற்சி அனுபவத்தைக் கொண்ட கிரான்ட் பிளவர், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சசெக்ஸ் கழகத்தில் இணைகிறார்.

முன்னதாக அவர் 2014 மற்றும் 2019 ஆகிய காலப்பகுதியில் பாகிஸ்தான் அணியினதும், 2010 மற்றும் 2014 ஆகிய காலப்பகுதியில் ஜிம்பாப்வே அணியினதும் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான கிரான்ட் பிளவர், அந்த அணிக்காக 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,571 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், அந்த அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த 3ஆவது வீரராகவும் வலம்வருகிறார்.

இதனிடையே, 2005 முதல் 2010 வரையான காலப்பகுதியில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் எசெக்ஸ் கழகத்துக்காக விளையாடிய அனுபவமும் அவருக்கு உண்டு. அந்த காலப்பகுதியில் எசெக்ஸ் கழகம் மூன்று தடவைகள் ஒருநாள் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

இதேவேளை, சசெக்ஸ் கழகத்தில் இணைவது தொடர்பில் கிரான்ட் பிளவர் கருத்து தெரிவிக்கையில்,

சசெக்ஸ் கழகத்தின் பயிற்சியாளர்கள் குழுவில் ஒருவராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாக பணிகள் ஆரம்பமாகும் வரை என்னால் காத்திருக்க முடியாது. ஆர்வமுள்ள இளம் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னிலையில் இடம்பிடித்திருப்பது பற்றி என்னிடம் கூறப்பட்டது, மேலும் அவர்களின் பயணத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே, சசெக்ஸ் கழகத்தின் துடுப்பாட்ட பிரிவுக்கு நம்பிக்கையளிக்கவும், அங்குள்ள வீரர்களுக்கு உற்சாமளிக்கவும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும் என எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, சசெக்ஸ் கழகத்தின் தலைமைப் பயிற்சியாளர் இயென் சாலிஸ்பரி கிராண்ட் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் பயிற்றுவிப்பு குழாத்தில் கிரான்ட் பிளவர் இணைவது கூடுதல் பலம் அளிக்கிறது. நான் 1989இல் ஜிம்பாப்வேக்கு முதல் சுற்றுப்பயணம் செய்தது முதல் அவரை அறிவேன், மேலும் அவரது பயிற்சி மற்றும் விளையாட்டு சாதனை அவரைப் பற்றி பேசுகிறது மற்றும் அவரது தனிப்பட்ட குணங்களுக்கு சான்றாக இருக்கலாம். ஜேம்ஸ் கெர்ட்லி, சாரா டெய்லர், ஆஷ் ரைட் மற்றும் மைக் யார்டி போன்றவர்களுடன் கிரான்ட் பிளவர் போன்ற சாதனை படைத்தவரைச் சேர்ப்பது நம்மை மிகவும் வலுவான நிலையில் வைக்கிறது. இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்ற முடிந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<