இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி ஐந்து நாள் சுற்றுலாவாக கம்போடியா சென்றுள்ளது. அங்கு கம்போடியா தேசிய கால்பந்தாட்ட அணியுடன் நட்பு ரீதியிலான போட்டி ஒன்றிலும் பங்கு பெறவுள்ளது.

கடந்த 10 மாதங்களில் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி பங்குபற்றும் முதல் நட்பு ரீதியிலான போட்டி இதுவேயாகும்.

மேலும் நட்பு ரீதியிலான போட்டியைத் தொடர்ந்து இரண்டு பயிற்றுவிப்பு வேளைகளிலும் பங்குபெறும்.

புதிதாக அமர்த்தப்பட்ட பிராதன பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டெய்ன்வோல் கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் கடந்த ஜூன் மாதம் நான்காம் திகதியிலிருந்து நான்கு மாத கால பயிற்சியில் ஈடுபடுகிறோம். ஆனால் வார இறுதி நாட்களில் வீரர்களை சம்பியன்ஸ் லீக் தொடரிற்காக விடுவிக்க வேண்டி நேர்ந்தது. ஆனால் கடந்த மாதம் முற்று முழுதான பயிற்றுவிப்பில் ஈடுபட்டோம்” என்றார்.

மேலும் தெரிவிக்கையில், “அணி அனைத்து விதத்திலும் ஸ்திரமாக காணப்படுகிறது. எனினும் பிரதான முன்கள வீரர் ஞானரூபன் வினோத் உபாதை காரணமாக எம்முடன் கம்போடியா பயணிக்கமாட்டார். எனினும் அவர் எதிர்வரும் ‘சொலிடாரிடி’ கிண்ணத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கின்றோம்” எனக் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சங்க தனுஷ்க, துமிந்து ஹெட்டியாராச்சி, பண்டார வரகாகொட, சதுரங்க சஞ்சீவ மற்றும் நிபுன பண்டாரவைத் தாண்டி அனைத்து வீரர்களையும் இளம் அணியாக 23 வயதிற்குட்பட்டோரைத் தெரிவு செய்துள்ளது.

குழுவில் அறிமுக வீரர்களாக பத்தொன்பது வயதிற்குட்பட்டோரான அபாம் அக்ரம், திலிப் பீரிஸ் மற்றும் தனுஷ்க மதுசங்க இணைக்கப் பெற்றுள்ளனர். திலிப் பீரிஸ், ஞானரூபன் வினோத் இல்லாத வெற்றிடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நான் பதவியைப் பெற்றுக்கொண்டதிலிருந்து பல மாற்றங்களைக் கொண்டுவரவேண்டியிருந்தது. இலங்கை கால்பந்து கழக மட்டம் சிறப்பானதொரு நிலையில் இல்லை. வீரர்கள் தங்களது பங்கினை சரியாக அறிந்திருக்கவில்லை.

நான் ஆரம்ப கட்ட பயிற்சிகளில் நேரத்தை செலவிட நேர்ந்தது. எனினும் இப்படிப்பட்ட தேசிய மட்டத்தில் இதனை அனுமதிக்க முடியாது. எதிர்வரும் பயிற்சிகளில் இவற்றை சீரமைத்து சொலிடாரிடி கிண்ணத்தில் சிறப்பாக விளையாடுவோம் என எதிர்பார்க்கிறேன்” என மேலும் கூறினார் டட்லி ஸ்டெய்ன்வோல்.

“எம்மால் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் மட்டுமே ஈடுபட முடிந்தது. எதிர்வரும் போட்டி பத்து மாதங்களில் நாம் விளையாடும் முதலாவது போட்டியாகும். எமது வீரர்கள் அனுபவத்தைப் பெற நாம் பல நட்பு ரீதியிலான போட்டிகளில் பிற நாடுகளுடன் விளையாட வேண்டும்” எனத் தனது அனுதாபத்தையும் தெரிவித்தார்.

இலங்கை அணியின் தலைவர் பதவியும் நட்சத்திர வீரர் மொஹமட் ரிப்னாசிடமிருந்து பழைய 23 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியின் தலைவர் சுஜன் பெரேராவிற்கு கைமாறியுள்ளது. சுஜன் பெரேரா மாலைதீவு கால்பந்தாட்டக் கழகமான ‘க்ளப் ஈகிள்ஸ்’ கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

“நான் மாலைதீவில் கடந்த இரு வருடங்களாக விளையாடி வருகிறேன். இலங்கையிலும் பார்க்க அங்கே அதிக அனுபவத்தைப் பெற வாய்ப்புகள் உள்ளன. இங்கே 9 மாதங்களில் 35 போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் உள்ளன.

அங்கே நாம் சிறப்பாக விளையாடி வருகிறோம். கடந்த வருடம் மூன்றாம் இடத்தை பெற்றதோடு FA கிண்ணத்தில் காலிறுதி வரை முன்னேறினோம். இவருடமும் தற்போது மூன்றாம் நிலையில் உள்ளோம்”, இவை தலைவர் சுஜனின் கருத்துகளாகும்.

சுஜன் மேலும் வெளிநாடுகளில் விளையாடுவதால் வீரர்கள் அனுபவத்தைப் பெறுவதோடு அது தேசிய அணியின் பலத்தையும் உயர்த்தும் எனத் தெரிவித்தார்.

பயிற்றுவிப்பாளர் ஸ்டெய்ன்வோல் சுஜன் மெலிதான புறநா நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

“சுஜன் மிகவும் அனுபவமிக்க வீரர். அவர் மாலைதீவில் விளையாடிய அனுபவம் அவரை சிறந்த தலைமைத்துவப் பண்பு மிக்கவராகவும் மாற்றியுள்ளது” எனக் கூறினார்.

“நான் இலங்கை அணியின் தலைவராகப் பொறுப்பேற்றதில் பெருமைப்படுகிறேன். கனவு மெய்ப்பட்டதனால் அதிக மகிழ்ச்சியாகவும் உள்ளேன்” என சுஜன் மேலும் தெரிவித்தார்.

கம்போடியா எதிர் இலங்கை- ஓக்டோபர் 9ஆம் திகதி பி.ப 6.30 (கம்போடிய நேரம்), பி.ப 5.00 (இலங்கை நேரம்) – பெனோன் பென், கம்போடியா

இத்தொடரை முடித்துவிட்டு இலங்கை கால்பந்தாட்ட அணி தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை குழு விபரம்-

சுஜன் பெரேரா (தலைவர்) – மொஹமட் ரிப்னாஸ் – சங்க மதுஷங்க – துமிந்து ஹெட்டியாராச்சி – பண்டார வரகாகொட – எடிசன் பிகுராடோ – சுபாஷ் மதுஷன்  – பிரபாத் ருவான் – அமித் குமார – அஸிகுர் ரஹ்மான் – கவீஷ் பெர்னாண்டோ – சதுரங்க சஞ்சீவ – திலிப் பீரிஸ் – சலன சமீர – நிபுன பண்டார – லக்சித ஜயதுங்க – கவிந்து இஷான் – தனுஷ்க மதுஷங்க – அபாம் அக்ரம் – சர்வான் ஜோஹர் – ஞானரூபன் வினோத்

  • பிரதான பயிற்றுவிப்பாளர்- டட்லி ஸ்டெய்ன்வோல்
  • உப பயிற்றுவிப்பாளர்- தேவசகாயம் ராஜமணி
  • கோல் காப்பாளர் பயிற்றுவிப்பாளர்- மஹிந்த கலகெதர
  • மேலாளர்- மொஹமட் ரமீஸ்
  • உபாதை கண்காணிப்பாளர்- S. சில்வா