சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான நேற்று (12) இலங்கை அணி மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.
ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.06 செக்கன்களில் ஓடி முடித்த இலங்கை வீரர் சந்துன் கோஷல தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவருடன் போட்டியிட்ட சக வீரரான விஷ்வ தாருக (14.27 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான 400 மீறறர் ஓட்டப் போட்டியை 47.17 செக்கன்களில் ஓடிமுடித்த ஒமெல் ஷஷின்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இந்த நேரப் பெறுதியானது அவரது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.
இந்த நிலையில், அண்மையில் பெருவின் லீமாவில் நடைபெற்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப்போட்டி வரை வந்த ஜத்ய கிருளுவிற்கு (47.56 செக்.) 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
மறுபுறத்தில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நுஹன்சா தக்ஷிமா (55.27 செக்.) வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
- இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் அணியில் முதல் தடவையாக இடம்பிடித்த முல்லைத்தீவு மாணவன்
- தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீரரான மெரோன் வீரசிங்க
இதனிடையே, ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தெவிந்து சந்தில் தூவகே (7.22 மீற்றர்), ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் தினுக தாபரே (39.24 மீற்றர்), பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் சிதன்சா மியுனி குணதிலக்க (15.32 செக்.), பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் ஜே. எச். கௌராஞ்சனி (37.95 மீற்றர்), பெண்களுக்கான 3000 ஓட்டப் போட்டியில் ஜீ. எச். துலாஞ்சனி (10 நி. 39.39 செக்.), பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தனஞ்சனா சித்மினி (5.73 மீற்றர்), ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதன்படி, போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த சுற்றுப்போட்டியில் இலங்கையிலிருந்து 29 வீரர்களும் 25 பெண் வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளதுடன், போட்டி இன்று (13) நிறைவடையவுள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<