டயலொக் கழக ரக்பி லீக் தொடரில் கடந்த வாரம் விமானப்படை அணியிடம் அதிர்ச்சித் தோல்வியை தழுவிய கண்டி விளையாட்டுக் கழக அணி, இன்று இலங்கை இராணுவப்படை அணியுடன் இடம்பெற்ற மூன்றாம் வாரத்திற்கான போட்டியில் 34-10 என்ற அடிப்படையில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

Visit the Dialog Rugby 2016/17 HUB for more

கண்டி கழக மற்றும் இலங்கை இராணுவப்படை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இடி மின்னலுடன் கூடிய அடைமழையில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இராணுவப்படை அணி சென்ற வாரம் CH&FC அணியை 39-12 என தோற்கடித்திருந்த நிலையில் இப்போட்டிக்கு நம்பிக்கையுடன் களமிறங்கியிருந்தது. கொட்டும் அடைமழையுடன் போட்டி ஆரம்பித்ததால் இரண்டு அணிகளும் ஆரம்பத்தில் சற்று மந்தமான கதியில் ஆட்டத்தில் ஈடுபட்டன. கண்டி அணி இன்றும் ஆரம்பத்தில் சில தவறுகளை இழைத்த போதிலும் பின்னர் தனது வழமையான சிறந்த ஆட்டத்துக்கு திரும்பியது.

கண்டிக் கழகத்தின் பலம் பொருந்திய வீரர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத இராணுவப்படை அணி பந்தை தமது வீரர்களின் கையிருப்பில் வைத்திருக்கத் தவறியது. சிறப்பான தடுப்பாட்டத்தினாலும் எதிர்தாக்குதலினாலும் பல தடவைகள் பந்தை மீள்பெற்றுக் கொண்ட கண்டி அணி, போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் காஞ்சன ராமநாயக்க ஊடாக தமது முதல் ட்ரையை பெற்றுக் கொண்டது. அடைமழையில் கிடைத்த சற்று கடினமானகன்வெர்ஷன்உதையை அர்ஷாட் ஜமால்டீன் தவறவிட்டார். (05-00)

கடந்த வார அதிர்ச்சித் தோல்வியின் பின்னர் கண்டி அணியில் பல புதிய வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், முக்கியமாக புவனேக உதங்கமுவ ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தார். 19ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் கோட்டிற்கு அண்மையில் கிடைத்தஸ்க்ரம் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட கண்டி அணி புவனேகவின் உதவியுடன் ட்ரை ஒன்றை வைத்தது. இம்முறை அர்ஷாடின் உதை குறிதவறவில்லை. (12-௦0)

23ஆவது நிமிடத்தில் திலின விஜேசிங்கவின் லாவகமான உதையை துரத்திச் சென்று பிடித்த ரிச்சர்ட் தர்மபால மீண்டும் பந்தை உதைத்து விரட்டிச் சென்று பிடித்து அபார ட்ரை ஒன்றை பெற்றுக் கொடுத்தார். இம்முறையும் அர்ஷாட் ஜமால்டீனின் துல்லியமான உதை கம்பங்களை ஊடறுத்துச் செல்ல, கண்டி அணி போட்டியில் தனது முழு ஆதிக்கத்தையும் நிலைநாட்டியது. (19-00)

மீண்டும் மழை கனமாக பெய்யத் தொடங்கியதால் இரண்டு அணிகளும் பந்து பரிமாற்றலில் பல தவறுகளை விட்டன. இந்நிலையில் எதிரணியின் 22m பகுதியில் இராணுவப்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்த போதிலும், அதனை உதைக்காமல் ட்ரை வைக்க முயற்சித்தனர். எனினும் கண்டி வீரர்கள் தமது சிறப்பான தடுப்பாட்டத்தினால் எதிரணியின் முன்னேற்றத்தை தடுத்தனர்.

கண்டி அணியானது தொடர்ந்து பல நிமிடங்கள் இராணுவப்படை அணியின் பாதியினுள் அழுத்தத்தை பிரயோகித்த நிலையில், மீண்டுமொருமுறை தனது வேகத்தை பலமாக பயன்படுத்திக் கொண்ட ரிச்சர்ட் தர்மபால அசத்தலான ஓட்டத்தின் பின்னர் தனது இரண்டாவது ட்ரையை வைத்தார். இம்முறை அர்ஷாட் உதையை தவறவிட்ட போதிலும், கண்டியின் தாக்குதல் இராணுவ அணியை நிலைகுலையைச் செய்திருந்தது. (24-00)

முதல் பாதி நிறைவுபெற சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் தமக்கு கிடைத்த பெனால்டி உதையை புள்ளிகளாக மாற்ற நினைத்த இராணுவ அணி, கம்பத்தை நோக்கி உதைக்க முடிவெடுத்தது. ஷானக குமார வெற்றிகரமாக உதைக்க அத்துடன் முதல் பாதி நிறைவுபெற்றது. (24-03)

முதல் பாதி : கண்டி விளையாட்டுக் கழக அணி 24 – 03 இராணுவப்படை அணி

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் கண்டி தனது ஆதிக்கத்தை தொடர்ந்த நிலையில் எதிரணிக்கு பலத்த அழுத்தத்தை கொடுத்தது. இதன் பலனாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொண்ட அர்ஷாட் ஜமால்டீன் தனது உதையின் மூலம் அணியின் புள்ளிகளை மேலும் அதிகரித்தார். (27-03)

இந்நிலையில் 53ஆவது நிமிடத்தில் மைதானத்தில் போதிய வெளிச்சம் இன்மையினால் போட்டியை தொடர முடியாத நிலை காணப்பட்டதால், வீரர்கள் சில நிமிடங்களுக்கு ஆடுகளத்தை விட்டு வெளியேறினர். எனினும் பின்னர் மின் விளக்குகள் ஒளிரப்பட்டதும் ஆட்டம் ஆரம்பித்தது.

பின்னர் இராணுவப்படை அணி தமது முழு பலத்தையும் கொண்டு ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரை கோட்டிற்கு அருகே பல நிமிடங்கள் இராணுவ அணி முகாமிட்டிருந்த போதிலும், கண்டி அணி சிறப்பாக தடுத்தாடியது. எனினும் தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்புக்களுடன் சிறப்பான பந்து கைமாற்றலையும் பயன்படுத்தி, 60ஆவது நிமிடத்தில் நிஷாந்த கொப்பேகடுவ இராணுவப்படை அணியின் முதல் ட்ரையை பெற்றுக் கொடுத்தார். பின்னர் கயான் சாலிந்தகன்வெர்ஷன்உதையை புள்ளிகளாக மாற்றினார். (27-10)

இப்போட்டியிலும் இரண்டாவது பாதியில் களமிறங்கிய பாசில் மரிஜா, தனது விவேகமான ஆட்டத்தினால் கண்டி கழகத்திற்கு ட்ரை வாய்ப்பொன்றை உருவாக்கிக் கொடுத்தார். அதனை தவறவிடாத அர்ஷாட், 72ஆவது நிமிடத்தில் கம்பங்களுக்கருகில் ட்ரை வைத்தார். இம்முறை திலின விஜேசிங்க இலகுவாக உதைக்க கண்டி அணியின் புள்ளி வித்தியாசம் மேலும் அதிகரித்தது. (34-10)

இறுதி வினாடிகளில் இரண்டு அணிகளும் புள்ளிகளை பெறாத நிலையில், கண்டி கழகம் 34-10 என்ற அடிப்படையில் வெற்றியை பெற்றுக் கொண்டது. கண்டி வீரர்கள் கடந்த போட்டியை விட இப்போட்டியில் சிறந்த முன்னேற்றத்தை வெளிக்காட்டியிருந்ததுடன் கடந்த போட்டியில் இழைத்த கவனக்குறைவான தவறுகளை சரிசெய்திருந்தனர்.

இப்போட்டியில் புவனேக உதங்கமுவ, திலின விஜேசிங்க, அர்ஷாட் ஜமால்டீன் மற்றும் ரிச்சர்ட் தர்மபால ஆகியோரின் சிறப்பான ஆட்டம் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்திருந்தது.

இரண்டாம் பாதியில் இராணுவப்படை அணி வீரர்கள் எதிரணிக்கு சவாலளிக்கக் கூடியதான விளையாட்டு பாணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும், முதல் பாதியில் அவர்கள் வெளிக்காட்டிய மந்தமான ஆட்டமே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

முழு நேரம் : கண்டி விளையாட்டுக் கழக அணி 34 – 10 இராணுவப்படை அணி

ThePapare.com இன் ஆட்ட நாயகன் புவனேக உதங்கமுவ (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளி விபரம்

கண்டி கழகம் 34 (5T 3C 1P)

ட்ரைகள் (5) – காஞ்சன ராமநாயக்க, ரிச்சர்ட் தர்மபால (2), புவனேக உதங்கமுவ, அர்ஷாட் ஜமால்டீன்
கன்வெர்ஷன் உதைகள் (2) – அர்ஷாட் ஜமால்டீன், திலின விஜேசிங்க
பெனால்டி உதை (1) – அர்ஷாட் ஜமால்டீன்

இராணுவப்படை அணி 10 (1T 1C 1P)

ட்ரை (1) – நிஷாந்த கொப்பேகடுவ
கன்வெர்ஷன் உதை (1) – கயான் சாலிந்த
பெனால்டி உதை (1) – ஷானக குமார

Replay : Army SC v Kandy SC - Dialog Rugby League 2016/17 - #Match 10