SAG பதக்கம் வென்ற மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊக்கமருந்து குற்றச்சாட்டு

88

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹராவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற 3 பாகிஸ்தான் வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்த தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட பாகிஸ்தான் அணி 31 தங்கம், 41 வெள்ளி மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 131 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

SAG போட்டிகளில் 250 பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இலங்கை

இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற மொஹமட் நயீம், ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் தங்கப் பதக்கம் வென்ற மெஹபுப் அலி மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சமி உல்லாஹ் ஆகிய மூவரும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது.   

இதேநேரம், 200 மீற்றரில் பங்கேற்ற உசைர் உர் ரஹ்மான், மற்றும் ஈட்டி எறிதலில் புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷாத் நதீம் ஆகிய இருவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாகிஸ்தான் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எங்களுக்கு குறித்த வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அறிவிப்பு வந்துள்ளது. எனினும் உரிய விசாரணைகளின் பிறகு தான் அவர்களது பெயர்களை உறுதிப்படுத்த முடியும்

ஆனால் இது ஒரு ஆரம்ப அறிவிப்பு என்பதால் பெயர்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் விரைவில் குறித்த அறிவிப்புக்கு பதிலளிப்போம். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.  

இதனிடையே, குறித்த வீரர்களை தடைசெய்வதற்கு முன்னர், குற்றம் சுமத்தப்பட்டுள்ள வீரர்கள் விசாரணைக்கு முகங்கொடுத்து தங்களை நிரூபிக்கும்படி கேட்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் மெய்வல்லுனர் வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளது.  

செப்டம்பரில் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நடத்த முஸ்தீபு

இதன்படி, குறித்த வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணமானால் பாகிஸ்தானிடம் இருந்து 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெண்கலகப் பதக்கமும் பறிமுதல் செய்யப்படவுள்ளது.  

இவ்வாறு பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் இலங்கைக்கு ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது

ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அசங்க இந்திரஜித்துக்கு வெண்கலப் பதக்கமும், ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ரொஷான் தம்மிகவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் பதக்கமொன்று கிடைக்கவுள்ளது தொடர்பில் அசங்க இந்திரஜித் கருத்து தெரிவிக்கையில்,  

“உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பதக்கத்தை வெல்வதற்கு நான் மிகவும் ஷ்டப்பட்டேன். இந்தப் போட்டியில் நானும், எனது தம்பியும் கலந்துகொண்டோம்

இந்திய வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து பதக்கமொன்றை வெல்ல நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் பாகிஸ்தான் வீரர் அந்தப் போட்டியில் வெற்றிபெற்றார்” என தெரிவித்தார்.

ஊக்கமருந்து சந்தேகத்தில் கென்ய மரதன் ஓட்ட வீரருக்கு போட்டித்தடை

இறுதியாக, கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் அசோக ஜயசுந்தர வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தார்

அதன்படி, குறித்த போட்டியில் 13 வருடங்களுக்குப் பிறகு பதக்கமொன்று கிடைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதனிடையே, அசங்க இந்திரஜித் மற்றும் தம்மிக ரொஷானுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியானால் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்கனவே வழங்கப்பட்ட பணப் பரிசினையும் பெற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

28 போட்டி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஒட்டுமொத்த பதக்கங்கள் அடிப்படையில் 40 தங்கம், 83 வெள்ளி மற்றும் 128 வெண்கலப் பதக்கங்களை வென்று 251 பதக்கங்களை வென்று இலங்கை அணி அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், தெற்காசிய விளையாட்டு விழாவில் அதிகளவு பதக்கங்களை வென்ற போட்டித் தொடராகவும் பதிவாகியது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<