நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

150

நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் 16 பேர் கொண்ட குழாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தேர்வுக்குழுவினால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 5-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்து. அடுத்த தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நாளை (05) ஆரம்பமாகின்றது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் குழாம் அறிவிப்பு

தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் 24ஆம் திகதி…

இந்நிலையில் ஒருநாள் தொடரின் பின்னர் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் குழாம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய இளையோர் அணியில் பிரகாசித்து இளம்  வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர் தான் பிரித்திவி ஷாவ். கடந்த 2018 ஒக்டோபரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற போட்டியில் தனது 18 ஆவது வயதில் டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

இதன் பின்னர் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாமில் இடம்பெற்றிருந்த பிரித்திவி ஷாவ் உபாதைக்கு முகங்கொடுத்ததன் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகியிருந்தார். இதன் பின்னர் உபாதையிலிருந்து மீண்டு இந்திய A அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹிட் சர்மா நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற இறுதி டி20 சர்வதேச போட்டியின் போது உபாதைக்குள்ளானார். 

இதன் காரணமாக எஞ்சிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹிட் சர்மா துரதிஷ்டவசமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்து A அணிக்கு எதிராக விளையாடிவரும் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரித்திவி ஷாவ் ஒரு வருடத்தின் பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றுள்ளார். 

இதேவேளை ஷிகர் தவானின் உபாதை காரணமாக இந்திய ஒருநாள் குழாமிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பிரித்திவி ஷாவ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஊக்க மருந்து சர்ச்சையில் இளம் வீரர் பிரித்திவி ஷாவ் தடைக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஓய்வின் பின்னர் மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் இணைந்த க்ளென் மெக்ஸ்வெல்

தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட…

இந்திய இளையோர் அணியில் விளையாடி கடந்த வருடம் (2018) ஜனவரியில் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த 20 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில், நியூசிலாந்து A அணிக்கு எதிரான தொடரில் மிகச்சிறப்பாக பிரகாசித்ததன் காரணமாக நியூசிலாந்து அணியுடன் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அடிப்படையில் இந்திய டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இவர் நேற்று முன்தினம் (02) நிறைவுக்குவந்த நியூசிலாந்து A அணிக்கெதிரான நான்கு நாள் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில்  இந்திய A அணியில் விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது இரட்டைச் சதம் விளாசியிருந்தமை விசேடமாக குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் தொடரில்  விளையாடியிருந்தது. குறித்த தொடரில் இடம்பெற தவறிய முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு திரும்பியுள்ளார். 

இந்திய அணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண தொடரின் போது உபாதைக்குள்ளனார். இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாமில் இஷாந்த் சர்மா இடம்பெற்றுள்ளார். இருந்தாலும் உடற்தகுதி பரிசோதனையின் பின்னரே இஷாந்த் சர்மா குழாமில் உறுதியாக இடம்பெறுவார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.  

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக செயற்பட்டுவரும் குல்தீப் யாதவ் தொடர்ந்தும் டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். மாறாக தமிழக சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் துடுப்பாட்ட வீரரான அஜிங்கியா ரஹானே ஆகியோர் டெஸ்ட் குழாமில் மாத்திரம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றனர்.

இலங்கையை சொந்த மண்ணில் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள…

இதேவேளை கடந்த வருட இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணியில் அறிமுகம் பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். நவ்தீப் சைனி 10 டி20 சர்வதேச போட்டிகளில் 13 விக்கெட்டுக்களையும், 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.  

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது விரல் உபாதைக்குள்ளான விக்கெட் காப்பாளர் விரித்திமன் சஹா உபாதையிலிருந்து மீண்டு டெஸ்ட் குழாமில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளார். மேலும் பங்களாதேஷ் தொடரில் தவறவிடப்பட்ட மற்றுமொரு விக்கெட் காப்பாளரான ரிஷப் பண்ட் நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி வெலிங்டனில் நடைபெறவுள்ளது. 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), மயங்க் அகர்வால், பிரித்திவி ஷாவ், சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (உபதலைவர்), ஹனுமா விஹாரி, விரித்திமன் சஹா, ரிஷப் பண்ட், ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா (உடற்தகுதியை பொறுத்து)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<