SAG போட்டிகளில் 250 பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இலங்கை

259

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (10) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது.

இம்முறை போட்டிகளில் 40 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது

இறுதியாக இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 25 தங்கப் பதக்கங்கனை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை அணி, இம்முறை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

எனினும், ஒட்டுமொத்த பதக்கங்கள் அடிப்படையில் 40 தங்கம், 83 வெள்ளி மற்றும் 128 வெண்கலப் பதக்கங்களை வென்று 251 பதக்கங்களுடன் இலங்கை அணி அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. அத்துடன், தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அதிகளவு பதக்கங்களை வென்ற போட்டித் தொடராகவும் இது பதிவாகியது.

SAG மெய்வல்லுனரில் 28 வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்த இலங்கை

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப்…

முன்னதாக, 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 186 பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 1991ஆம் ஆணடு கொழும்பில் நடைபெற்ற 5ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 44 தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டதே இலங்கை அணி தெற்காசிய விளையாட்டு விழாவில் பெற்றுக்கொண்ட அதிகபட்ச பதக்கங்களாக இடம்பிடித்தது.

இதேவேளை, 28 போட்டி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் 174 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா வழமைபோன்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், போட்டிகளை நடாத்திய நேபாளம் 2ஆவது இடத்தை தனதாக்கியது.

இதில் இறுதியாக 2016 இந்தியாவில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 3 தங்கம், 23 வெள்ளி மற்றும் 34 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட நேபாளம், இம்முறை 51 தங்கம் 59 வெள்ளி மற்றும் 94 வெண்கலப் பதக்கங்களை வென்று தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் அதிக தங்கம் மற்றும் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

>>Photos : Final Day | South Asian Games 2019<<

வரலாறு படைத்த இலங்கை மெய்வல்லுனர் அணி 

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி ஒட்டுமொத்த சம்பியனான தெரிவாகியதுடன், 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

1991 ஆம் ஆண்டின் பின்னர் மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்களை இலங்கை வீரர்கள் வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் களமிறங்கிய இலங்கை மெய்வல்லுனர் அணி ஒட்டுமொத்தமாக 15 தங்கம், 12 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்கள் உள்ளட்டங்கலாக 35 பதக்கங்களை வென்று அசத்தியது

இதேவேளை, இம்முறை மெய்வல்லுனர் போட்டிகளில் டில்ஷி குமாரசிங்க (400, 800, 4x400) 3 தங்கப் பதக்கங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, நிலானி ரத்னாயக்க (1500, 5000), லக்ஷிகா சுகன்தி (100 சட்டவேலி, 4x100), சாரங்கி சில்வா (நீளம் பாய்தல், 4x100) மற்றும் அருண தர்ஷன (400, 4x400) ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களையும் வெற்றி கொண்டனர்.

அத்துடன், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஹிருனி விஜேரத்ன தங்கப் பதக்கம் வென்று பெருமையைத் தேடிக் கொடுத்தார்.

35 வருடகால தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை பெற்றுக் கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்

 இதேவேளை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x100 மற்றும் 4x400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி ஆண், பெண் இருபாலாரிலும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது.

இதில் 4x100 அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட ஹிமாஷ ஏஷான் தலைமையிலான இலங்கை அணி 15 வருடங்களுக்குப் பிறகு தெற்காசிய சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

குத்துச்சண்டையில் முதல் தங்கம்

தெற்காசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான நேற்று (10) 13 போட்டிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 81 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் ருமேஷ் சந்தகெலும் தங்கப் பதக்கம் வென்றார்

தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் 20 வருடங்களுக்குப் பிறகு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்தடவையாகும்.

இம்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் 14 வீரர்கள் இலங்கை சார்பாக களமிறங்கியதுடன், இதில் 11 வீரர்கள் பதக்கங்களை வெற்றி கொண்டனர். இதன்படி ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை குத்துச்சண்டை அணி, தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல்தடவையாக அதிகளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்தது


கரப்பந்தாட்டத்தில் இலங்கை ஆதிக்கம்

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இலங்கை பி அணிகள் போட்டியிட்டிருந்ததுடன், இலங்கைக்கு முறையே 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் கிட்டியது.

செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கடற்கரை மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றதுடன், இதன் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்திக டிரோன், ஜயான் தனூஜ ஜோடி, 2க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் அசங்க ப்ரதீப், அஷேன் ரஷ்மிக ஜோடியை வீழ்த்தியது.

இதேநேரம், பெண்கள் பிரிவில் தினேஷா ப்ராஸாதினி, கசுனி சாருக்க ஜேரடி, தீபிகா பண்டார, சதுரிக்கா மதுஷானி ஜோடியை 2க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

கபடியில் வரலாறு படைத்த இலங்கை

தெற்காசியாவை பொறுத்தமட்டில் கபடி விளையாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இம்முறை போட்டிகளில் இலங்கை ஆண்கள் கபடி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 29க்கு 27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

தொடர்ந்து நேபாளத்தை 34க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை, பிரபல இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், தமது இறுதி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை 35க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில் வீழத்திய இலங்கை அணி, தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல்தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

எனினும், இறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை உலகின் முதல்நிலை கபடி அணியான இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை 28க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவிது.

இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல்தடவையாக வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை கபடி அணி அசத்தியது.

இதேநேரம், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்தத தவறிய இலங்கை பெண்கள் கபடி வெண்கலப் பதக்கத்தை வென்றது

SAG கபடியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கபடி போட்டிகளில்…

நீச்சலில் மெத்தியூவுக்கு 7 தங்கங்கள்

இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்தியூ அபேசிங்க இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் ஏழு தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டார்.

ஆண்களுக்கான 50 மீற்றர் 100 சாதாரண நீச்சலில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற அவர், 200 மீற்றர் 100 சாதாரண நீச்சலில் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்

இதனையடுத்து 100 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்திய மெத்தியூ, ஆண்களுக்கான 4x100 சாதாரண நீச்சல் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதேநேரம், கடைசி 3 நாட்களில் மேலும் 3 தங்கப் பதக்கங்களை அவர் வெற்றி கொண்டார். இதில் 100 சாதாரண நீச்சல், 200 மீற்றர் கலப்பு நீச்சல் மற்றும் 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் ஆகிய போட்டிகளில் அவர் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டார்

முன்னதாக, 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவிலும் மெத்தியூ அபேசிங்க 7 தங்கப் பதக்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை நீச்சல் அணி 7 தங்கம், 11 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.

இலங்கைக்காக 7 தங்கப் பதக்கங்களை வென்ற மெதிவ் அபேசிங்க

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் (SAG) நீச்சல்…

கோல்வ்வில் சாதனை

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா கோல்வ் போட்டியில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. பெண்களுக்கான தனிநபர் பிரிவில் க்றேஸ் யட்டவர தங்கப் பதக்கத்தை வென்றதுடன், அவருடன் போட்டியிட்ட துஹாசினி  செல்வரட்ணம் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இப்போட்டியின் முதல் நாளன்று 18 குழிகளை 69 நகர்வுகளில் பூர்த்தி செய்ததன் மூலம் அரங்குக்கான சாதனைனையும் க்றேஸ் புதுப்பித்தார்

இதேவேளை, பெண்களுக்கான அணிநிலை கோல்வ் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இந்த அணியில் க்றேஸ், துஹாசினி, தானியா பாலசூரிய ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர்.

இதேநேரம், ஆண்களுக்கான அணிநிலை கோல்வ் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் கோல்வ் விளைளயாட்டில் இலங்கை சார்பாக 7 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 13 பதக்கங்களை இலங்கை அணி கைப்பற்றியது.

டய்க்வொண்டோவில் 26 பதக்கங்கள் 

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களை வென்று கொடுத்த போட்டிகளில் டய்க்வொண்டோ முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதில் இலங்கை வீரர்கள் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 26 பதக்கங்களை சுவீகரித்தது

இறுதியாக இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை டய்க்வொண்டோ அணி ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை மாத்திரமே வெற்றி கொண்டது.

கிரிக்கெட்டில் ஏமாற்றம்

தெற்காசிய விளைளயாட்டு விழாவில் இம்முறை இணைத்துக்கொள்ளப்பட்ட டி20 போட்டியில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முறையே பங்களாதேஷ் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தன

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பங்குபற்றலின்றி நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் தோல்வியுறாத அணியாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்ததுடன், இலங்கை பெண்கள் அணி இறுதிப் போட்டியில் 2 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<