கடும் முயற்சியின் பின்னர் சொலிட் அணியை வீழ்த்தியது ப்ளூ ஸ்டார்

1233
blue star v solid sc

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் சூப்பர் 8 சுற்றிற்கான ஐந்தாம் வார போட்டியொன்றில் சொலிட் விளையாட்டுக் கழகம் மற்றும் மற்றும் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழக அணிகள் மோதிக் கொண்டன. களனி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகமானது 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில் ப்ளூ ஸ்டார் அணியானது சூப்பர் 8 புள்ளி அட்டவணையில் மூன்றாம் இடத்தில் காணப்பட்டதோடு சொலிட் விளையாட்டுக் கழகம் நான்காவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் போட்டியை தொடக்கி வைத்ததுடன், ஆரம்பம் முதலே அடுத்தடுத்து தாக்குதல் நகர்வுகள் மூலம் எதிரணிக்கு பலத்த அழுத்தத்தை வழங்கியது. அபொஞ்சா ஜிபோலா சொலிட் விளையாட்டுக் கழகத்தின் தடுப்பு வீரர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டார்.

போட்டியின் 9 ஆவது நிமிடத்தில் ப்ளூ ஸ்டார் அணிக்கு முதல் வாய்ப்பு கிடைத்த போதிலும் இதோவு ஹமீடின் முயற்சி கோல் கம்பத்தில்பட்டு வெளியேறியது. தொடர்ந்தும் ப்ளூ ஸ்டார் வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய நிலையில் ப்ரீ கிக் வாய்ப்பொன்று உட்பட சில வாய்ப்புகள் கிடைத்தன.

அவ்வாறானதொரு வாய்ப்பு ஹமீடிற்கு கிடைத்ததுடன் இம்முறை ஹமீடின் உதை இலக்கை நோக்கி அமைந்திருக்கவில்லை. போட்டியின் 20 ஆவது நிமிடத்தில் சிறப்பான பந்து பரிமாற்றங்கள் மூலமாக முன்னேறிய ப்ளூ ஸ்டார் அணி ஜிபோலா மூலமாக கோல் கம்பங்களிற்குள் உதைத்த போதிலும் ஓப்சைட் காரணமாக அது நிராகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் 26 ஆவது நிமிடத்தில் தொடர் முயற்சிகளின் பலனாக ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் போட்டியின் முதல் கோலினை பெற்றுக் கொண்டது. விவேகமாக தடுப்பாட்ட வீரர்களை மீறி முன்னேறிய ஜிபோலா, மொஹமட் பர்ஸினிற்கு பந்தினை கடத்த, அவர் இலகுவாக கோல் போட்டார்.

தொடர்ந்தும் ஜிபோலா – ஹமீட் கூட்டணி சொலிட் விளையாட்டுக் கழகத்திற்கு பெரும் தலையிடியாக காணப்பட்டது. எனினும் கோல் எண்ணிக்கையை சமநிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் சொலிட் அணியின் முன்கள வீரர்கள் எதிரணிக்கு அழுத்தத்தை வழங்கினர்.

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் சொலிட் விளையாட்டுக் கழகம் தொலைவிலிருந்து சில கோல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ப்ளூ ஸ்டார் அணியின் கோல் காப்பாளர் மஞ்சுள பெர்னாண்டோ அவற்றை சிறப்பாக தடுத்தார். அத்துடன் முதல் பாதி நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 01 – 00 சொலிட் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியின் இறுதியில் வெளிக்காட்டிய சிறப்பான ஆட்டத்தை சொலிட் அணி மீண்டும் வெளிப்படுத்தியது. அவ்வணியின் துரிதமான நகர்வுகளையும் தாக்குதல் ஆட்டத்தையும் ப்ளூ ஸ்டார் அணி சிரமத்துடனே எதிர்கொண்டது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் அடுத்தடுத்து ஒவ்வொரு கோல் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் இரு அணிகளுமே அவற்றை தவறவிட்டன. இந்நிலையில் 56 ஆவது நிமிடத்தில் ப்ளூ ஸ்டார் அணியின் சிரேஷ்ட வீரர் E.B. சன்ன விதிமுறை மீறிய ஆட்டம் காரணமாக மஞ்சள் அட்டை ஒன்றை பெற்றுக் கொண்டார்.

அவரை தொடர்ந்து சொலிட் அணியின் வீரரான தீபாலிற்கும் 61 ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. எனினும் அற்புதமான வாய்ப்புக்கள் சிலவற்றை சொலிட் அணி உருவாக்கி கொண்ட போதிலும், அடுத்தடுத்து அவ்வாய்ப்புகள் கைநழுவின.

இரண்டாம் பாதியின் நடுப்பகுதியில் இரண்டு அணிகளினதும் முன்கள வீரர்கள் தமது உதைகளை குறிதவறாது இலக்கை நோக்கி உதைக்க தொடங்கியதால் இரு அணிகளின் கோல் காப்பாளர்களும் விழிப்புடன் அவற்றை தடுத்தனர்.

சில நிமிடங்களின் பின்னர் இரு அணிகளும் சில தவறுகளை மேற்கொள்ள போட்டியின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும் ஜிபோலா தமது அணியின் புள்ளி வித்தியாசத்தை அதிகரித்துக் கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் ப்ளூ ஸ்டார் அணியின் ஹமீட் கோல் கம்பத்தை நோக்கி சிறப்பாக உதைத்தார். ஆனாலும் வேகமாக செயற்பட்ட கோல் காப்பாளர் இஷான் பந்தினை கம்பங்களிற்கு மேலாக திசை திருப்பி தனது அணிக்கு நம்பிக்கையளித்தார்.

87 ஆவது நிமிடத்தில் சொலிட் வீரர்களின் நம்பிக்கையை சிதைத்த மொஹமட் பர்ஸின் கோல் ஒன்றினை பெற்றுக் கொடுத்து ப்ளூ ஸ்டார் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதன்படி அடுத்த சில நிமிடங்களில் அமைதியாகவும் நிதானமாகவும் பந்தினை கையிருப்பில் வைத்துக் கொண்ட ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2-0 என வெற்றியை பெற்றுக் கொண்டது.

முழு நேரம்: ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 02 – 00 சொலிட் விளையாட்டுக் கழகம்

இவ்வெற்றியின் மூலம் ப்ளூ ஸ்டார் அணி புள்ளி அட்டவணையில் மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டதுடன் சொலிட் அணி ஐந்தாம் இடத்திற்கு பின்தள்ளப்படக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – இதோவு ஹமீட் (ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் –மொஹமட் பர்ஸின் 26, 87

மஞ்சள் அட்டை

ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – E.B. சன்ன 56

சொலிட் விளையாட்டுக் கழகம் – தீபால் 61

WATCH MATCH REPLAY