மாகாண முதல்தர தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள கொழும்பு, கண்டி அணிகள்

240

இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருக்கும் 23 வயதின் கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட “சுபர் ப்ரோவின்ஷியல்” (SUPER PROVINCIAL) கிரிக்கெட் தொடரின் ஆரம்ப கட்டப் போட்டிகள் இரண்டும் இன்று (19) நிறைவுக்கு வந்தன.

“சுபர் ப்ரோவின்ஷியல்” கிரிக்கெட் தொடரில் காலி, கொழும்பு, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகியவற்றின் 23 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு எதிர் தம்புள்ளை

கொழும்பு  CCC மைதானத்தில் நிறைவுற்ற இப்போட்டியில், கொழும்பின் 23 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி தம்புள்ளை 23 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 61 ஓட்டங்களால் வீழ்த்தியது.

>> லஹிரு திரிமான்னவின் துடுப்பாட்டத்தால் ஹேலீஸ் அடுத்தடுத்து வெற்றி

போட்டியில் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட கொழும்பு அணி, 98.5 ஓவர்களில் 379 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் குவித்தது. கொழும்பு அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய அகீல் இன்ஹாம் 83 ஓட்டங்களை குவிக்க, ரிஷித் உபமல் (68), ஹிமாஷ லியனகே (61) மற்றும் மலிந்த அமரசிங்க (51) ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றிருந்தனர்.

இதேவேளை, தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் திறமையை வெளிக்காட்டிய ரந்தீர ரணசிங்க 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தம்புள்ளை முதல் இன்னிங்ஸில் வெறும் 158 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. இந்த முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் போதாது என்பதால் 220 ஓட்டங்கள் பின்னடைவில் மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸில் பலோவ் ஒன் (Follow on) முறையில் துடுப்பாடிய தம்புள்ளை வீரர்கள் இம்முறையும் சோபிக்கத் தவறி 160 ஓட்டங்களை மட்டும் குவித்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவினர்.

கொழும்பு அணியின் பந்துவீச்சு சார்பாக இடதுகை சுழல் வீரரான கெளமல் நாணயக்கார மொத்தமாக 10 விக்கெட்டுக்களை கைப்பற்றி தம்புள்ளை அணியை தோற்கடிக்க உதவியிருந்தார். தம்புள்ளை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அவர்களது இரண்டாம் இன்னிங்ஸில் கேஷான் வன்னியராச்சி பெற்றுக் கொண்ட 45 ஓட்டங்களே அவ்வணியில் தனிப்பட்ட ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாக அமைந்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 379 (98.5) – அகீல் இன்ஹாம் 83, றிசித் உபமால் 68, ஹிமாஷ லியனகே 61, மலிங்க அமரசிங்க 51, ரந்தீர ரணசிங்க  4/42

தம்புள்ளை  (முதல் இன்னிங்ஸ்) – 158 (41.5) – கீத் பெரேரா 31, கெளமல் நாணயக்கார 4/37, சவிந்து பீரிஸ் 3/36

தம்புள்ளை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 160 (78.4) – கேஷான் வன்னியாரச்சி 45, கீத் பெரேரா 33, கெளமல் நாணயக்கார 6/51

முடிவு – கொழும்பு அணி இன்னிங்ஸ் மற்றும் 61 ஓட்டங்களால் வெற்றி


காலி எதிர் கண்டி

கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற காலியின் 23 வயதின் கீழ்ப்பட்ட அணி மற்றும் கண்டியின் 23 வயதின் கீழ்ப்பட்ட அணிளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் கண்டி அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

>> திரிமான்னவின் துடுப்பாட்டத்தை வீணாக்கிய சதீரவின் அபார துடுப்பாட்டம்

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய காலி அணியினர், கண்டி அணியின் திறமையான பந்துவீச்சு காரணமாக 181 ஓட்டங்களை மட்டுமே தமது முதல் இன்னிங்சுக்காக குவித்தனர். காலி அணிக்காக ரமிந்த விஜேயசூரிய 72 ஓட்டங்களை குவித்து தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்ததோடு கண்டி அணியில் திறமையை வெளிக்காட்டிய டிரோன் சிவகுமாரன் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய கண்டி அணி மாதவ நிமேஷ் சதம் கடந்து பெற்றுக் கொண்ட 137 ஓட்டங்களின் துணையோடு தமது முதல் இன்னிங்ஸில் 356 ஓட்டங்களை குவித்தது. ஹரீன் புத்தில 4 விக்கெட்டுக்களை காலி அணி சார்பில் கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து, 175 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த காலி அணி நவிந்து நிர்மல் போராடி பெற்றுக் கொண்ட சதத்தின் (115) உதவியோடு 302 ஓட்டங்களை குவித்தது. கண்டி அணியின் பந்துவீச்சு சார்பாக இம்முறையும் சிறப்பாக செயற்பட்ட டிரோன் சிவகுமாரன், நிமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

காலி அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து போட்டியின் வெற்றி இலக்கான 131 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணி, 33.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. கண்டி அணியின் வெற்றியை இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த ஹசிந்த ஜயசூரிய உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

காலி (முதல் இன்னிங்ஸ்) – 181 (55.3) – ரமிந்த விஜேசூரிய 72, சசித் மதுரங்க 31, டிரோன் சிவகுமாரன் 6/53

கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 356 (89.5) – மாதவ நிமேஷ் 137, டிலான் ஜயலத் 74, ஹரீன் புத்தில 4/86

காலி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 302 (79.2) – நவிந்து நிர்மல் 115, திலான் பிராஷன் 90, டிரோன் சிவகுமாரன் 3/92, நிமேஷ் மெண்டிஸ் 3/66

கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 131/6 (33.3) – ஹசிந்த ஜயசூரிய 76*, திலான் பிரஷான் 2/37

முடிவு – கண்டி அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<