உமேக சதுரங்கவின் சுழலில் சிக்கிய களுத்துறை

85

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் 3ஆவது வாரத்துக்கான நான்கு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் இன்று (29) நிறைவுக்கு வந்தன.

நீர்கொழும்பு அணியின் தலைவரும் இடதுகை சுழல்  பந்துவீச்சாளருமான உமேக சதுரங்க, களுத்துறை அணியின் 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் பிரகாசிக்க, கடற்படை அணியின் சுபுன் லீலாரத்ன மற்றும் துஷான் ஹேமந்தவும், பொலிஸ் அணியின் சமித் துஷாந்தவும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து சதங்களை குவித்தனர்.

நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர விளையாட்டுக் கழகம்

கதிரான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் இன்றைய தினம் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய களுத்துறை நகர அணி, நீர்கொழும்பு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக பந்துவீச்சில் அசத்திய 33 வயதான உமேக சதுரங்க, 79 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, மறுபுறத்தில் ஷெஹான் வீரசிங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து கடைசி நேரத்தில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்படி, களுத்துறை அணியை விட 70 ஓட்டங்களால் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பில் பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஹத்துருசிங்க

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நீர்கொழும்பு அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 221 (92.2) – பிரவீன் பெர்னாந்து 87, பிரசன்சன ஜயமான்ன 54, ரவீந்திர கருணாரத்ன 24, மதீஷ பெரேரா 5/47, எரங்க ரத்னாயக்க 2/12

களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 193 (65.2) – நிலூஷன் நோனிஸ் 22, கீத் பெரேரா 30, சுரேஷ் நிரோஷன் 89, எரங்க ரத்னாயக்க 20, உமேக சதுரங்க 7/79, ஷெஹான் வீரசிங்க 3/57

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 62/3 (27.0) –பிரவீன் பெர்னாந்து 32, திலஸ்ரீ லொகு பண்டார 22, மதீஷ பெரேரா 3/23


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

கடற்படை அணியின் சுபுன் லீலரத்ன மற்றும் துஷான் ஹேமந்தவின் சதங்களின் உதவியுடன் பாணந்துறை அணிக்கு எதிராக கடற்படை விளையாட்டுக் கழகம் பலமான நிலையில் உள்ளது.

பாணந்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் காஷிப் நவீத்தின் சதத்தினால் பாணந்துறை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற கடற்படை அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக 3ஆம் இலக்கத்தில் களமிறங்கிய சுபுன் லீலரத்ன, 11 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்களையும், 6ஆம் இலக்கத்தில் களமிறங்கிய துஷான் ஹேமந்த 17 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். இவ்விருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக 219 ஓட்டங்களை வீழ்த்தப்படாத இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பாணந்துறை அணி சார்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 27 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ரமீஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 375 (92.1) – காஷிப் நவீத் 192, மாதவ சுகுரங்க 71, ஷஷ்ரிக்க புசேகொல்ல 31, சதுரங்க திக்குபுர 3/45, இஷான் அபேசேகர 3/96, சுதார தக்‌ஷின 3/108

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 270/4 (90) – சுபுன் லீலரத்ன 115*, துஷான் ஹேமந்த 108*, சதுரங்க திக்குபுர 24, மொஹமட் ரமீஸ் 3/41


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழகம் தமது முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்ட 234 ஓட்டங்களுக்கு பதிலளித்த பொலிஸ் அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களுடன் இன்றைய 2ஆவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது.

பாணந்துறை அணிக்கு வலுசேர்த்த நவீடின் அபார துடுப்பாட்டம்

இதில் அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய வலதுகை துடுப்பாட்ட வீரரான சமித் துஷாந்த 3 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 121 ஓட்டங்களையும், நிமேஷ் விமுக்தி ஒரு சிக்ஸர் 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள அவ்வணி முன்னிலை பெற்றது.

இதன்போது விமானப்படை அணி சார்பில் சொஹான் ரங்கிக 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதனையடுத்து 68 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த விமானப்படை அணியும் இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 234 (59.1) – ராஜு கயஷான் 58, லக்‌ஷான் பெர்னாண்டோ 51, ரொஸ்கோ தத்தில் 33, நிலேஷ் விமுக்தி 5/85, சமோத் பியுமால் 2/55

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (98.5) – தரிந்து டில்ஷான் 38, நிமேஷ் விமுக்தி 61, சமித் துஷாந்த 121, கமல் புஷ்பகுமார 28, சொஹான் ரங்கிக 5/46, புத்திக சந்தருவன் 2/81, ரொஸ்கோ தடில் 2/14

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 41/2 (13.0) – நிலேஷ் விமுக்தி 2/25


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகலை யூத் கிரிக்கெட் கழகம்

பனாகொடை இராணுவ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற குருநாகலை யூத் அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக, தனுஷ்க தர்மசிறி 116 பந்துகளுக்கு முகங்கொடுத்து 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று அவ்வணிக்கு வலுச் சேர்த்தார்.

முன்னதாக தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பொடுத்தாடிய லங்கன் அணி 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 248 (83.1) – சானக ருவன்சிறி 81, சஷேன் பெர்னாந்து 55, ரஜீவ் வீரசிங்க 32, கேஷான் விஜேரத்ன 2/28, சிவகுமார் டிரோன் 2/44, ருவந்த ஏகநாயக்க 2/51, துசித் டி சொய்சா 2/62

குருநாகலை யூத் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 245/6 (95) – மலித் குரே 40, தனுஷ்க தர்மசிறி 52, ஹஷான் பிரபாத் 25, நவீன் கவிகார 3/62