ஆசிய மெய்வல்லுனர் சம்பின்ஷிப் முதல் நாளில் இலங்கை வீரர்கள் அபாரம்

210

ஆசிய வலயத்தின் 45 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளான நேற்று இலங்கை அணி வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியிருந்தனர்.

ஈட்டி எறிதலில் தில்ஹானிக்கு வெள்ளிப்பதக்கம்

பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய இலங்கையின் நதீஷா தில்ஹானி லேகம்கே, தனது தனிப்பட்ட சிறந்த தூரத்தைப் பதிவு செய்து இலங்கைக்கான முதல் பதக்கத்தை நேற்று பெற்றுக்கொடுத்தார்.

புவனேஸ்வரிலுள்ள காலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 58.11 மீற்றர் தூரத்தை எறிந்து நதீஷா தில்ஹானி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொள்ள, சீனாவின் லீ லிங்வெய் 63.06 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அன்னு ராணி 57.32 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் 22 பேர்

முன்னதாக 56.92 மீற்றர் தூரத்தை தனது தனிப்பட்ட சிறந்த பதிவாகக் பதிவுசெய்த நதீஷா தில்ஹானி, இவ்வெற்றியின் மூலம் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கைக்காக முதல் சர்வதேச மட்டத்திலான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். முன்னதாக 2012ஆம் அண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் நதீகா லக்மாலி பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

400 மீற்றர் இறுதிப் போட்டிக்கு திலிப், அஜித் தகுதி

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திலிப் ருவன் மற்றும் அஜித் பிரேமகுமார ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பெற்று இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

கடந்த முறை றியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றியிருந்த இந்தியாவின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் அனஸ் பங்குபற்றிய முதலாவது தகுதிகாண் போட்டியில் இலங்கையின் திலிப் ருவன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் 46.89 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்ய, மொஹமட் அனஸ் 46.70 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 2ஆவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய அஜித் குமார இந்திய வீரரிடம் தோல்வியைத் தழுவினாலும், அவர் போட்டித் தூரத்தை 46.82 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், தனது தனிப்பட்ட சிறந்த திறமையையும் பதிவு செய்தார்.

எனினும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் தொடரில் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்ட வீரர்களும் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை. எனினும் நேற்று மாலை முதலாவது அரையிறுதிப் போட்டியில் திலிப் ருவன் கலந்துகொண்ட போதிலும், போட்டியின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக அது பிற்போடப்பட்டது. இதனையடுத்து இன்று காலை நடைபெற்ற போட்டியை 46.41 செக்கன்களில் ஓடிமுடித்த அவர் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

அதேபோல 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய அஜித் பிரேமகுமார போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனவே இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இருவரும் தகுதி பெற்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் பங்குபற்றிய நிர்மாலி மதுஷிகா போட்டித் தூரத்தை 54.38 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றமையினால், இன்று மாலை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

ஹிமாஷ, சுரன்ஜய முன்னேற்றம் : ருமேஷிக்காவுக்கு ஏமாற்றம்

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர்களான ஹிமாஷ ஏஷான் மற்றும் வினோத் சுரன்ஜய சில்வா ஆகியோர் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.

நேற்று இரவு நடைபெற்ற முதல் தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட ஹிமாஷ போட்டித் தூரத்தை 10.47 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும், வினோத் சுரன்ஜய போட்டித் தூரத்தை 10.44 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும் பெற்றனர்.  

சர்வதேச வெற்றிகளை தந்தைக்கு சமர்ப்பணம் செய்யும் சாதனை நாயகன் கணேசராஜா சினோதரன்

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்க, தான் பங்குபற்றிய 100 மீற்றர் போட்டியில் தவறான ஆரம்பத்தை மேற்கொண்டமையினால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், நாளை நடைபெறவுள்ள 200 மீற்றர் போட்டியில் அவர் மீண்டும் களமிறங்கவுள்ளார்.

இறுதிப் போட்டியில் மஞ்சுள

இலங்கை அணியின் தலைவரும், உயரம் பாய்தல் வீரருமான மஞ்சுள குமார, நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் 2.10 மீற்றர் உயரத்தை தாவி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இதே ஆசிய மெய்வல்லுனர் சம்பின்ஷிப் போட்டியின் உயரம் பாய்தலில் மஞ்சுள குமார தங்கம் வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இப்போட்டியில் றியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கட்டார் நாட்டு வீரரான முடாஸ் பாசிம் கலந்துகொள்ளாததால், தங்கம் வெல்லும் வாய்ப்பு மஞ்சுளவுக்கு கிட்டியுள்ளது. எனினும், உயரம் பாய்தலில் ஆசியாவின் மிகப் பிரபலமான வீரர்களான சீனா, சிரியா மற்றும் ஈரானைச் சேர்ந்த வீரர்கள் மஞ்சுளவுக்கு மிகப் பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று நடைபெறவுள்ள போட்டிகளில் சன்ஞய ஜயசிங்க (முப்பாய்ச்சல்), துலான்ஞலி குமாரி (உயரம் பாய்தல்) ஆகியோரின் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அத்துடன் 100 மீற்றர் அரையிறுதி மற்றும் 400 மீற்றர் இறுதிப் போட்டிகளும் இன்று மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையிலான முடிவுகள்

இதுவரை நடைபெற்ற போட்டி முடிவுகளின் படி பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 2 தங்கத்துடன் 2ஆவது இடத்திலும், ஒரேயொரு தங்கம் வென்ற கிரிகிஸ்தான் 3ஆவது இடத்திலும் உள்ளது. ஒரேயொரு வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை 9ஆவது இடத்தில் உள்ளது.

சுமார் 800 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் 42 வகையான போட்டிகள் இடம்பெற உள்ளன. இதில் பெண்களுக்கு 21 போட்டிகளும், ஆண்களுக்கு 21 போட்டிகளும் அடங்கும். அத்துடன் அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்றாகவும் இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.