ஷமி ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியாது – ரோஹித்

Sri Lanka Tour of India 2022

277
Did not want to run him out like that: Rohit on Dasun Shanaka

இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானகவை மான்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்வதற்கு கிடைத்த வாய்ப்பை வாபஸ் பெற்றுக்கொண்ட காரணத்தை இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று T20I மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற T20I தொடரை 2க்கு 1 என இந்தியா கைப்பற்றியது.

இந்தநிலையில், குவஹாத்தியில் நேற்று (10) நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 67 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றயீட்டியது.

இதனிடையே, T20I தொடரைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்த இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானகவுக்கு போட்டியின் போது கடைசி ஓவரில் சதத்தைப் பெற்றுக்கொள்ள இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மொஹமட் ஷமி வீசிய அந்த ஓவரின் 4வது பந்தை இலங்கை அணியின் கசுன் ராஜித எதிர் கொண்டார். அப்போது பந்துவீச்சு முனையில் இருந்த இலங்கை அணியின் தலைவர் ஷானக கிரீஸை விட்டு வெளியேற, பந்து வீச ஓடிவந்த மொஹமட் ஷமி பந்தை வீசாமல் ஷானகவை ரன் அவுட் செய்து கள நடுவரிடம் மேல்முறையீடு செய்தார். ஐசிசி விதிமுறைப்படி மான்கட் முறையில் தசுன் ஷானக ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஆனால், அந்த நேரத்தில் உடனடியாக தலையிட்ட இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, மொஹமட் ஷமியின் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதுடன், அவரை மீண்டும் துடுப்பாட அழைத்தார். இதனால் அடுத்த 2 பந்துகளில் பௌண்டரி மற்றும் சிக்சர் விளாசிய தசுன் தசுன் ஷானக ஒருநாள் போட்டிகளில் தனது 2ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.

எனவே, ரோஹித் சர்மாவின் இந்த பெருந்தன்மையான செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளதுடன், பலரும் ரோஹித் சர்மாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போட்டியின் பிறகு பேசிய ரோஹித் சர்மா, ‘தசுன் ஷானகவை மொஹமட் ஷமி மான்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய நினைத்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக அப்போது 98 ஓட்டங்களை எடுத்திருந்தார், துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஒருவரை மான்கட் முறையில் விக்கெட் எடுப்பது சரியானது அல்ல. இதனால் தான் மொஹமட் ஷமியின் கோரிக்கையை திரும்ப பெற்றேன், அதுபோன்று விக்கெட் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தசுன் ஷானகவிற்கு எனது வாழ்த்துக்கள். அவர் இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்’ என்று தெரிவித்தார்.

இதேவேளை, ரோஹித் சர்மாவின் இந்த செயலை இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். முன்னாள் இலங்கை வீரர் சனத் ஜயசூரிய வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

‘நடுவரிடம் ரன் அவுட்டை வாபஸ் பெற்ற ரோஹித் சர்மா ஸ்போர்ட்மேன்ஷிப்பின் உண்மையான வெற்றியாளர். அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்சலோ மெதிவ்ஸ் வெயியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பல தலைவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள். விதிமுறை சொன்னாலும் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதற்காக சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது. ஹேட்ஸ் ஆஃப் ரோஹித் சர்மா’ என குறிப்பிட்டிருந்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<