பந்து வீச்சில் பிரகாசித்த ரமித் ரம்புக்வெல்ல, ஜீவன் மெண்டிஸ்

178

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டியொன்றில், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரேலிய விளையாட்டுக் கழக அணிகள் மோதிக்கொண்டன. மூன்று நாட்கள் கொண்ட இப்போட்டியில், இரண்டாவது நாளான இன்று ஆட்ட நேர முடிவின்போது தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 345 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையிலுள்ளது.

முன்னைய செய்திகள் : சரித், கருணாரத்னவின் ஓட்டங்களால் மீண்ட தமிழ் யூனியன் கழகம்

முதலாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பதுரேலிய விளையாட்டுக் கழகம் 52.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சுக்காக 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பதுரேலிய விளையாட்டுக் கழக அணி சார்பாக நதீர நாவல கூடிய ஓட்டங்களாக, 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 6௦ ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரமித் ரம்புக்வெல்ல 5 விக்கெட்டுகளையும் மற்றும் ஜீவன் மென்டிஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 7 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சிதார கிம்ஹான் மற்றும் தினுக் விக்கரமனாயக்க முதல் விக்கெட்டுக்காக 134 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று, அணி சார்பாக சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக்கொடுத்தனர்.

பதுரேலிய விளையாட்டுக் கழக அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அலங்கார அசங்க சில்வா 78 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 252 (63.3) – சரித் ஜயம்பதி 50, சாமிக கருணாரத்ன 48, சாலிய சமன் 51/4, அலங்கார அசங்க 70/3

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 129 (52.5) – நதீர நாவல 60, ரமித் ரம்புக்வெல்ல 47/5,  ஜீவன் மெண்டிஸ் 49/4

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 222/7 (56) – சிதார கிம்ஹான் 86, தினுக் விக்கரமனயக்க 48, தரங்க பரனவிதான 30, அலங்கார அசங்க சில்வா 78/6