இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் மாவட்ட அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

352
SLC Districts One Day Tournament to kick off tomorrow

இலங்கையிலுள்ள மாவட்டங்கள் மோதிக்கொள்ளும், ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரொன்றினை இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

வாரியத்தினால் ஏற்கனவே திட்டமிட்டபடி, நடைபெற இருந்த பிரிமியர் லீக் (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்) சுற்றுப்போட்டிகள் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மூலம் நடைபெறுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தொடர் நடைபெறாதமையினால் அத்தொடரிற்கு பிரதியீடாகவே இந்த மாவட்ட அணிகள் பங்குபெறும் ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது.

பிரிமியர் லீக் போட்டிகளில், சரியான காரணங்கள் கூறாது தம்மை தொடரில் இணைக்கவில்லை என, நீர் கொழும்பு கிரிக்கெட் கழகம் வழக்கு தாக்கல் செய்ததனை அடுத்தே, நீதிமன்றம் கடந்த மாதம் 17 ஆம் திகதி அத்தொடரிற்கு தடை உத்தரவினை விதித்திருந்தது. இவ் உத்தரவினால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த கிரிக்கெட்தொடரொன்று நடைபெறாமல் போயிருந்தது.

பிரிமியர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிற்கு மாற்றீடாக காணப்படும் மாவட்ட அணிகளுக்கு இடையிலான, இந்த சுற்றுத்தொடர் நாளை (15) ஆரம்பமாகவுள்ளதோடு, இத்தொடரில் மொத்தமாக இலங்கையின் 24 மாவட்டங்களின் கழகங்கள் பங்கு கொள்கின்றன.

இத்தொடரில், பங்குபெறும் மாவட்ட அணிகள் மாகாண ரீதியாக 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வோர் குழுவிலும் மூன்று மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தின் அணிகளிலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கழக மட்டம் A, B ஆகியவற்றினை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

தொடரின் முதற்கட்ட போட்டிகளாக, மாவட்ட அணிகள் தத்தமது குழுக்களில் காணப்படும் அணிகளுடன் இரண்டு தடவைகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் ஒரு போட்டி குறிப்பிட்ட மாவட்ட அணியின் சொந்த மைதானத்திலும் ஏனையது மற்றைய வெளி மைதானத்திலும் நடைபெறும்.

ஒவ்வொரு குழுவிலும், புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளராகும் அணிகள் யாவும் போட்டியின் அடுத்த கட்டமான காலிறுப் போட்டிகளுக்கு தகுதி பெறும். இத் தொடரின் இறுதிப்போட்டி, ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி  கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இந்த சுற்றுத்தொடர் List A வகைப்போட்டிகளாக இடம்பெற இருக்கின்றது.

எனினும், இதுவரையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் உத்தியோகபூர்வமாக தொடர் பற்றிய அறிவிப்போ அல்லது தொடரின் போட்டி அட்டவணையோ வெளியிடப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடரின் மாவட்டங்கள் மற்றும் குழுக்கள்

மத்திய

மாகாணம்

கிழக்கு

மாகாணம்

வடக்கு

மாகாணம்

வட மத்திய

மாகாணம்

கண்டி அம்பாறை யாழ்ப்பாணம் மன்னார்
நுவரெலியா மட்டக்களப்பு கிளிநொச்சி அனுராதபுரம்
மாத்தளை திருகோணமலை வவுனியா பொலன்னறுவை
வட மேல்

மாகாணம்

தென்

மாகாணம்

ஊவா

மாகாணம்

மேல்

மாகாணம்

புத்தளம் மாத்தறை பதுளை கொழும்பு
கேகாலை காலி இரத்தினபுரி களுத்துறை
குருணாகல் ஹம்பாந்தோட்டை மொனராகலை கம்பஹா