இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் கனிஷ்ட அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. இதில் நிப்புன் ரன்சிக்க மற்றும் ஏனைய சக பந்து வீச்சாளர்கள் முழு திறமையையும் வெளிக்காட்டி இலங்கை கனிஷ்ட அணி, தென்னாபிரிக்க கனிஷ்ட அணியை குறைவான ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி 77 ஓட்டங்களால் வெற்றியை சுவைத்துள்ளது.

இதன் மூலம், இலங்கை கனிஷ்ட அணி இத்தொடரின் சம்பியனாக முடிசூடிக்கொண்டதுடன் இந்த முக்கோண தொடரில் தென்னாபிரிக்கா உடனான தொடர் தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.

இத்தொடரில் நடைபெற்று முடிந்த ஏனைய போட்டிகளின் வெற்றி தோல்விகள் மூலம் கிடைத்த புள்ளிகளின் மூலம் இரு அணிகளும் இந்த இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

பார்ல் நகரத்தின் போலன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, கடைசிப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இலங்கை கனிஷ்ட அணித்தலைவர் அவிஷ்க பெர்னாந்து மற்றும் விஷ்வ சத்துரங்க ஆகியோர் இன்றைய போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வழமைபோன்று துடுப்பாட களமிறங்கினர்.

துடுப்பாட்டத்தின் ஆரம்பத்தில் இலங்கை கனிஷ்ட அணியின் விஷ்வ சத்துரங்க போட்டியின் இரண்டாவது ஓவரில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெறும் 2 இரண்டு ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர், இலங்கை 16 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்து ருஆன் டி ஸ்வார்டின் பந்து வீச்சில் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த மோசமான ஆரம்பத்தினால் இலங்கை கனிஷ்ட அணி ஓட்டங்கள் சேர்ப்பதில் தடுமாற தொடங்கியது. இந்த நிலையை தமக்கு சாதமாக்கிக்கொண்ட தென்னாபிரிக்க கனிஷ்ட அணி,இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரையும் சொற்ப ஓட்டங்களுக்குள் மடக்கியது. இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை கனிஷ்ட 123 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அஷான் பண்டாரவின் 33 ஓட்டங்கள் மற்றும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்த பிரவீன் ஜயவிக்ரம நிப்புன் ரன்சிக்க ஆகியோர் இறுதி விக்கெட்டுக்காக பகிர்ந்து கொண்ட 33ஓட்டங்களின் துணை காரணமாக, இலங்கை கனிஷ்ட அணி 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை கனிஷ்ட அணியினை அச்சுறுத்தியிருந்த தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் பந்து வீச்சாளர்களில், முக்கியமாக ருஆன் டி ஸ்வார்ட் மூன்று விக்கெட்டுக்களையும் வலது கை சுழல் பந்துவீச்சாளர் கெனன் ஸ்மித் இரண்டு விக்கெட்டுக்களையும் லுத்தோ சிபமாலா, ஜேட் டி கிளார்க், மிச்சேல் வான் புய்ரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் இலகு வெற்றி இலக்கான, 157 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு ஆடுகளம் நோக்கி விரைந்த தென்னாபிரிக்க கனிஷ்ட அணி ஒரு நல்ல ஆரம்பத்தை தந்திருந்தது. எனினும், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 19 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், வன்டைல் மாவ்கெட்டு P De.S குலரத்ன கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளரான நிப்புன் ரன்சிக்கவின் பந்து வீச்ச்சில் விக்கெட் காப்பாளர் விஷ்வ சத்துரங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 5 ஓட்டங்களுடன் அவர் மைதானத்தினை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து புதிதாக வந்த துடுப்பாட்ட வீரரான ஜெஸ்ஸெ கிரிஸ்டென்சன் நிப்புன் ரனசிங்கவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே 4ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி அனுப்பப்பட்டார். அடுத்தாக மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்த மெத்திவ் பிரிட்ஸ்கே 13 ஓட்டங்களுடன் நிப்புன் ரன்சிக்கவினால் நிர்மூலமாக்கப்பட்டு மைதானத்தினை விட்டு வெளியேறச்செய்யப்பட்டதால், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 32ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் மத்திய தரவரிசை வீரர்களின் விக்கெட்டுக்களை வேட்டையாடும் பொறுப்பினை தமதாக்கிக்கொண்ட பிரவீன் ஜயவிக்ரம, ஹரீன் வீரசிங்க, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அப்பொறுப்பினை சிறப்பாக செய்து முடித்து மத்திய வரிசை வீரர்களை 15 இற்கு குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தனர்.

பின்னர், சக பந்து வீச்சாளர்களினால் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுக்களை தவிர மிகுதியாய் இருந்த விக்கெட்டுக்களையும் நிப்புன் ரன்சிக்க கைப்பற்றியதனால், வெறும் 46 ஓட்டங்களுக்குள் கடைசி 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 32.3 ஓவர்களில் தென்னாபிரிக்க கனிஷ்ட அணி வெறும் 79 ஓட்டங்களினைப் பெற்று இப்போட்டியில் இலங்கையிடம் மேலதிக 77 ஓட்டங்களை பெற முடியாமல் படுதோல்வியடைந்தது.

இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி பெற்றுக்கொண்ட இந்த ஓட்டங்களானது அவ்வணியின் இரண்டாவது குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க கனிஷ்ட அணி சார்பாக, ஜேட் டி கிளார்க் அதிகபட்சமாக 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இப்போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த நிப்புன் ரன்சிக்க 7.4 ஓவர்களை வீசி 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை தன் வசப்படுத்தியதுடன், மறுமுனையில் இலங்கை கனிஷ்ட அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்த செபஸ்டியன் கல்லூரியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம, ஹரீன் வீரசிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

நிறைவடைந்த இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும், இத்தொடர் நாயகனாவும் இலங்கை கனிஷ்ட அணியின் வேகப்பந்து வீச்சாளரான நிப்புன் ரன்சிக்க தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கனிஷ்ட அணி: 156 (44.5) – அஷேன் பண்டார 33(65), பிரவீன் ஜயவிக்ரம 20(37), ருஆன் டி ஸ்வார்ட் 30/3(8.5), கெனன் ஸ்மித் 29/2(7)

தென்னாபிரிக்க கனிஷ்ட அணி: 79 (32.4) – ஜேட் டி கிளார்க் 16(48), நிப்புன் ரன்சிக்க 19/5(7.4), ஹரீன் வீரசிங்க 5/2(7), பிரவீன் ஜயவிக்ரம 13/2(10)

போட்டி முடிவு – இலங்கை கனிஷ்ட அணி 77 ஓட்டங்களால் வெற்றி

சென்ற வருடத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற இளையோர் ஆசிய கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டியில், போராட்டத்தினை வெளிக்காட்டியும் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவிய இலங்கை கனிஷ்ட அணி இத்தொடரில் பெற்ற இந்த வெற்றி மூலம் புத்துணர்ச்சி அடைந்திருக்கின்றது.

இன்னும், இன்றைய போட்டியில் சிறப்பாக செயற்பட்டிருந்த நிப்புன் ரன்சிக்க இலங்கை தேசிய அணிக்கு உள்வாங்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளும் நிலவுகின்றன.

இந்த போட்டித்தொடர் பற்றிய சில தகவல்கள்

  • அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்ட வீரர் – அவிஷ்க பெர்னாந்து (292 ஓட்டங்கள்)
  • அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் – நிப்புன் ரன்சிக்க (17 விக்கெட்டுக்கள்)