இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு மூன்று புதிய குழுக்கள் நியமிப்பு

108
SLC appoints

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியின் கீழ் மூன்று புதிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் உத்தரவிற்கமைய உடன் அமுலுக்கும் வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இவ்வாறு மூவரங்கிய குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டினால் 225 பாடசாலைகளுக்கு லெதர் பந்துகள் விநியோகம்

நாட்டின் ஒன்பது மாகாணங்களையும்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தல் கடந்த மே மாதம் 30ஆம் திகதி நடைபெறவிருந்தது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை அடுத்து தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து விளையாட்டுத்துறை அமைச்சரால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டார். எனவே, அவருக்கு உதவும் வகையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமின்றி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு சுயாதீன ஆலோசனைக் குழு ஒன்றை நியமிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை கோரிக்கை விடுத்து 2 மாதங்களின் பின்னர் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தக் குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நடைபெறும் வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் குழு, போட்டித் தொடர் குழு மற்றும் நடுவர்களின் குழு என இந்த 3 குழுக்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட இந்தக் குழுவின் ஆலோசனைக் குழுவில் ஆறு பேரும், போட்டித் தொடர் மற்றும் நடுவர் குழுக்களில் தலா ஐவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மைக்கல் சொய்ஸா, கென் அல்விஸ், சந்திக்க ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க, கிரெஹம் லெப்ரோய், ஏஷ்லி டி சில்வா மற்றும் ஜெரோம் ஜயரத்ன ஆகியோர் ஆலோசனைக் குழுவுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மைக்கல் சொய்ஸா மற்றும் கென் அல்விஸ் ஆகிய இருவரும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களாக கடமையாற்றியவர்களாவர். ஏனைய நால்வரும் இலங்கை கிரிக்கெட்டில் பணிபுரிகின்ற ஊழியர்களாக உள்ளமை சிறப்பம்சமாகும்.

நுவன் சொய்சா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு

ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை…

போட்டித் தொடர் குழுவில் சமன்த தொடங்கவல, ஷேன் பெர்னாண்டோ, எச். பரதலிங்கம், ரிபாய் ஆரிப், மஹிந்த ஹலங்கொடத ஆகியோரும், நடுவர் குழுவில் கே.எச் நந்தசேன, பிரிகேடியர் ஷிரான் அபேசேகர, ஜனக களுஹெதிவெல, ப்ரியன்த அல்கம மற்றும் .ஆர்.எம் அரூஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த 3 குழுக்களும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் ஏனைய சங்கங்கங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பொதுச்சபை உறுப்பினர்கள் இம்மாதம் 12ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளனர். இதன்போது சுயாதீன தேர்தல் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<