தெற்காசியாவில் புதிய வரலாறு படைத்த இலங்கையின் யுபுன்

Resisprint International 2022

244
Yupun Abeykoon becomes first South Asian to break 10 second barrier

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களில் ஓடிமுடித்த முதலாவது தெற்காசிய வீரராகவும், இலங்கை வீரராகவும் யுபுன் அபேகோன் இன்று (03) புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அதேபோல, ஆண்டுகளுக்கான 100 மீட்டரில் தனது சொந்த தெற்காசிய சாதனையையும், இலங்கை சாதனையையும் அவர் முறியடித்தார்.

உலக மெய்வல்லுனர் சங்கத்தின் கண்டங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக சுவிட்சர்லாந்தில் இன்று (03) நடைபெற்ற 42ஆவது Resisprint International சர்வதேச மெய்வல்லுனர் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், போட்டித் தூரத்தை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவுசெய்த அவர், கடந்த மே மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற International Athletics Meeting Anhalt 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 100 மீட்டரை 10.06 செக்கன்களில் ஓடி முடித்து நிகழ்த்திய தனது சொந்த தெற்காசிய சாதனையையும், இலங்கை சாதனையையும் முறியடித்தார்.

அத்துடன், 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடிமுடித்த முதலாவது தெற்காசிய வீரராகவும், இலங்கை வீரராகவும் யுபுன் அபேகோன் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

குறிப்பாக மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் தெற்காசிய வீரர் ஒருவர் 10 செக்கன்களுக்குள் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை நிறைவு செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதேபோல, 100 மீட்டரில் ஆசியாவில் சிறந்த நேரத்தைப் பதிவு செய்த வீரர்களில் யுபுன் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடி முடித்த 10ஆவது ஆசிய நாட்டு வீரராகவும், உலகளவில் 167ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

அதுமாத்திரமின்றி, இலங்கையின் முன்னாள் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்குப் பிறகு 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இவ்வாறான திறமையை வெளிப்படுத்திய முதல் இலங்கை வீரராகவும் யுபுன் அபேகோன் வரலாற்றில் இடம்பிடித்தார்.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட அவர், போட்டித் தூரத்தை 10.11 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யுபுன் பங்குகொண்ட இறுதிப்போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த மொன ரெய்னியர் (9.99 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பிரான்ஸின் மெபா மிட்செல் (10.00 செக்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

2013ஆம் ஆண்டு கனிஷ்ட வீரராக முப்பாய்ச்சல் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யுபுன் அபேகோன், கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தாலியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றதுடன், குறித்த காலப்பகுதியில் பல முன்னணி சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாக இன்று இலங்கையின் அதிவேக வீரராகவும், தெற்காசியாவின் அதிவேக வீரராகவும் இடம்பிடித்துவிட்டார்.

எனவே, இலங்கை மண்ணுக்கு பெருமையை தேடிக்கொடுத்த யுபுன் அபேகோன், இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை சார்பில் போட்டியிடவுள்ளார். உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<