இந்தியா – இலங்கை தொடர் ஜூலை 13இல் ஆரம்பம்

India tour of Sri Lanka 2021

72

இலங்கை வரும் இந்திய அணி டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ‘Sony Network’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் 18 முதல் 22ஆம் திகதிவரை இங்கிலாந்து சௌதம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது

இதில் பங்கேற்பதற்காக விராட் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சிரேஷ் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடர் ஆகஸ்ட் 4 முதல் செம்படம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறும்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா

இந்த இடைப்பட்ட காலத்தில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜூலை மாதம் இலங்கை வருகைத்தந்த தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 16, 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து டி-20 கிரிக்கெட் தொடர் ஜூலை 21, 23, 25ம் திகதிகளில் நடைபெறும். போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், போட்டிகள் பெரும்பாலும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

முன்னதாக இலங்கையுடன் மேலும் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது வெளியாகியுள்ள போட்டி அட்டவணையில் மேலதிக இரண்டு டி-20 போட்டிகள் சேர்க்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது

இந்த நிலையில், தற்போது அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்திய அணி வீரர்கள் குழாம் வெளியாக வாய்ப்புள்ளது

இதில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவான் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐயிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, முதன்முறையாக இரண்டு இந்திய அணிகள், வெவ்வேறு நாடுகளில் சர்வதேச தொடரில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பயிற்சியாளரா்கும் ராகுல் டிராவிட்?

இதுஇவ்வாறிருக்க, இந்திய அணி கடைசியாக 2018ஆம் ஆண்டு இலங்கை வருகைத்தந்து நிதஹஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. அதன்பிறகு தற்போதுதான் இலங்கை வரவுள்ளது.

இதனிடையே, இலங்கை செல்லவுள்ள இளம் இந்திய அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராகச் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…