இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா

India tour of Sri Lanka 2021

154

இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20I போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த சுற்றுப்பயணம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உறுதியளித்துள்ளதுடன், தொடர் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐசிசியின் எதிர்கால தொடர்கள் குறித்த வரைவில், இந்திய அணியானது, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று T20I போட்டிகளில் விளையாடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கடந்த ஆண்டு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த மூன்று ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடர் கொவிட்-19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 5 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக சௌரவ் கங்குலி இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொடர் நடைபெறுமாயின், இந்திய அணியானது தங்களுடைய இரண்டாவது தெரிவு குழாத்தை இலங்கைக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்காக ஜூன் 2ம் திகதி இங்கிலாந்து செல்லவுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த இறுதிப்போட்டிக்கான குழாத்தில் இந்திய அணியின் முன்னணி 20 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்படுவதுடன், 4 மேலதிக வீரர்களும் இணைக்கப்படவுள்ளனர்.

எனவே, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய குழாத்தில், முன்னணி வீரர்கள் இணைக்கப்படமாட்டார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…