சுற்றுலா இலங்கை கனிஷ்ட அணிக்கும், தென்னாபிரிக்க கனிஷ்ட அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில், இன்று நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியில், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது பந்து வீச்சு துறையில் சிறப்பாக செயற்பட்டு இலங்கை கனிஷ்ட அணியை 49 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றியியை சுவீகரித்துள்ளது.

இவ்வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-0 என வெற்றி பெற்று இத்தொடரையும் தம்வசமாக்கியுள்ளது.

ஓளட்ஸ்ஹூன் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்க கனிஷ்ட அணிக்கு வழங்கினார்.

நிப்புன் ரன்சிக்கவின் அபாரப் பந்துவீச்சினால், முக்கோண ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இலங்கை கனிஷ்ட அணி

இதன்படி, மெத்திவ் ப்ரீட்ஸ்கே மற்றும் வன்டைல் மக்வெட்டு ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதல் விக்கெட்டுக்காக, 59 ஓட்டங்களினை பகிர்ந்து கொண்டனர். தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் முதல் விக்கெட்டாக கமிந்து மெண்டிஸின் பந்து வீச்சில் மக்வெட்டு 30 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து, புதிதாக வந்த துடுப்பாட்ட வீரரான ரெய்னாட் வான் டொன்டருடன் ஜோடி சேர்ந்த மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ப்ரீட்ஸ்கே இரண்டாவது விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களைப் பகிர்ந்து தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். மெத்திவ் ப்ரீட்ஸ்கேயின் விக்கெட்டினை தொடர்ந்து புதிதாக மைதானத்திற்கு வந்த துடுப்பாட்ட வீரர்கள் குறைவான ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்து சென்றனர். எனினும் ரெய்னாட் டொன்டரின் அரைச்சதத்துடன் தென்னாபிரிக்க கனிஷ்ட அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 220 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மெத்திவ் ப்ரீட்ஸ்கே 68 ஓட்டங்களைப் பெற்றுகொண்டதுடன், மறுமுனையில் ரெய்னாட் வான் டொன்டர் 72 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் பிற்பாதியில், பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை கனிஷ்ட அணியின், நிப்புன் ரன்சிக்க 39 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹரீன் வீரசிங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 221 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை 50 ஓவர்களில் பெறுவதற்கு விஷ்வ சத்துரங்க, அவிஷ்க பெர்னாந்து ஆகியோருடன் இலங்கை கனிஷ்ட அணி ஆடுகளம் விரைந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அவிஷ்க பெர்னாந்து வெறும் 5 ஓட்டங்களுடன் ருஆன் டி ஸ்வார்ட்டின் பந்து வீச்சில் ரெய்னாட் வான் டொண்டரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பெர்னாந்துவினை அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களான கிரிஷான் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் பத்திற்கு குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை கனிஷ்ட அணி 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து இலங்கை கனிஷ்ட அணி, மேலதிகமாக சொற்ப இணைப்பாட்டங்களினை குவித்திருந்த போது, இலங்கை கனிஷ்ட அணிக்காக போராடிக்கொண்டிருந்த விஷ்வ சத்துரங்க 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். இதனால், மேலும் நெருக்கடிக்குள்ளாகிய இலங்கை கனிஷ்ட அணியின் மத்திய வரிசை வீரர்கள் வெற்றி இலக்கினை அடைய ஓரளவு போராடினர்.

எனினும் இலங்கை அணியின் ஆறாவது விக்கெட்டினை தொடர்ந்து ஏனைய விக்கெட்டுக்கள் சடுதியாக பறிபோன காரணத்தினால், இலங்கை கனிஷ்ட அணியானது 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 49 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை கனிஷ்ட அணி சார்பாக பின்வரிசையில் போராட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த அஷென் பண்டார 39 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திய ருஆன் டி ஸ்வார்ட் 3 விக்கெட்டுக்களையும், மைக்கல் கொஹேன், கெனன் ஸ்மித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இத்தொடரினை  தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது கைப்பற்றியிருக்கும் இந்நிலையில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் மூன்றாவதும் இறுதியுமான இளையோர் ஒரு நாள் போட்டி எதிர்வரும் ஞாயிறு (பெப்ரவரி 5) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்காவின் ரெய்னாட் வான் டொன்டெர் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்க கனிஷ்ட அணி : 220/8 (50) – மெத்திவ் ப்ரீட்ஸ்கே 68(105), ரெய்னாட் வான் டொன்டர் 61(72), நிப்புன் ரன்சிக்க 39/4 (10), ஹரீன் வீரசிங்க 47/2 (10)

இலங்கை கனிஷ்ட அணி : 171 (44.3) – விஷ்வ சத்துரங்க 40(41), அஷென் பண்டார 39(61), மிஷேன் சில்வா 29(46), ருஆன் டி ஸ்வார்ட் 38/3 7.3), கெனன் ஸ்மித் 39/2(10), மைக்கல் கொஹேன் 43/2(10)

போட்டி முடிவு – தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 49 ஓட்டங்களால் வெற்றி