SLC தேசிய சுபர் லீக் தொடரின் பிரதான அனுசரணையாளராகும் டயலொக்

Dialog-SLC National Super League 2022

164

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் இன்றைய தினம் (24) ஆரம்பமாகியுள்ள தேசிய சுபர் லீக் (Dialog-SLC National Super League) தொடருக்கான பிரதான அனுசணையாளர்களாக இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனம் இணைந்துள்ளது.

அணிகளுக்கு தலா 50 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டித்தொடர், இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 19ஆம் திகதிவரை தொடரின் போட்டிகள் நடைபெறவுள்ளன.

>> 2021ஆம் ஆண்டின் ICC இன் சிறந்த T20 வீரரானார் ரிஸ்வான்

டயலொக்-SLC தேசிய சுபர் லீக் தொடரின் போட்டிகளை நேரடியாக டயலொக் தொலைக்காட்சியின் 140வது அலைவரிசை, Thepapare.com இன் தளங்கள் (பேஸ்புக், இணையத்தளம்) மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ Youtube பக்கங்களில் பார்வையிட முடியும்.

தேசிய அணிக்கான வீரர்களை தெரிவுசெய்யும் முகமாக கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள மற்றும் ஜப்னா போன்ற அணிகளை உள்ளடக்கிய இலங்கையின் முன்னணி 100 கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டித்தொடரில் விளையாடவுள்ளனர். கொழும்பு அணியின் தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளதுடன், கண்டி அணியின் தலைவராக கமிந்து மெண்டிஸ், காலி அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ், ஜப்னா அணியின் தலைவராக தனன்ஜய டி சில்வா மற்றும் தம்புள்ள அணியின் தலைவராக அஷான் பிரியன்ஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டித்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 8 போட்டிகளில் விளையாடவுள்ளதுன், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் எதிர்வரும் 19ம் திகதி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும்.

இந்த போட்டித்தொடர் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, “கடந்த சில தொடர்களில் இலங்கை அணி மற்றும் இலங்கை இளையோர் அணிகள் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தி வருகின்றன. எனவே, இந்த தொடரின் மூலம் புதிய திறமைகளை கண்டறிய முடியும் என எதிர்பார்க்கிறோம்.

அதேநேரம், தொடருக்கான பிரதான அனுசரணையாளர்களாக இணைந்துக்கொண்டுள்ள டயலொக் ஆசியாட்டா நிறுவனத்துக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டும். டயலொக்-SLC தேசிய சுபர் லீக் தொடர் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதிர்வரும் நான்கு வாரங்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமையும்” என்றார்.

டயலொக் ஆசியாட்டா நிறுவனமானது இலங்கை கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் போன்றவற்றுக்கு அனுசரணை வழங்கிவருகின்றது. அதேநேரம், ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட கிண்ணம், கடற்கரை கரப்பந்தாட்டம், பாடசாலை றக்பி, பிரீமியர் லீக் கால்பந்து, கடற்கரை கால்பந்து, பாடசாலை கிரிக்கெட், இளையோர் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் விளையாட்டுகள், இராணுவ பாரா போட்டிகள், தேசிய பாரா போட்டிகள் மற்றும் சர்வதேசத்தை பிரதிநிதித்துவப்படும் பாரா போட்டிகள் என்பவற்றுக்கு அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேரடியாக ஒளிபரப்பாகும் போட்டிகள்

  • 24 ஜனவரி – காலி எதிர் கொழும்பு
  • 26 ஜனவரி – ஜப்னா எதிர் கண்டி
  • 28 ஜனவரி – தம்புள்ள எதிர் காலி
  • 30 ஜனவரி – கண்டி எதிர் தம்புள்ள
  • 1 பெப்ரவரி – கொழும்பு எதிர் ஜப்னா
  • 4 பெப்ரவரி – தம்புள்ள எதிர் ஜப்னா
  • 7 பெப்ரவரி – கொழும்பு எதிர் தம்புள்ள
  • 10 பெப்ரவரி –கண்டி எதிர் தம்புள்ள
  • 13 பெப்ரவரி – ஜப்னா எதிர் காலி
  • 16 பெப்ரவரி – காலி எதிர் கண்டி
  • 19 பெப்ரவரி –இறுதிப்போட்டி (பகலிரவு போட்டி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<