இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் ‘Ape Kollo’ பாடல்

ICC T20 World Cup – 2021

138
 

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் இலங்கை அணியை உற்காசப்படுத்தும் நோக்கில் அபே கொல்லோ (Ape Kollo) என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையும், டயலொக் ஆசியாட்ட நிறுவனமும் இணைந்து இந்தப் பாடலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் புகழ்பெற்ற பாடகர்கள் மற்றும் டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் குறியீட்டு தூதுவர்களான (Dialog brand ambassadors) பாதிய, சந்தூஷ், உமாரியா, யொஹானி, சங்க தினெத், சஜித, சனுக்க, செனாலி, மாதுவி மற்றும் விசேட அழைப்பு பாடகரான ரோய் ஜக்சன் உள்ளிட்டோர் இந்தப் பாடலுக்காக தமது பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

அத்துடன், T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் இலங்கை அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பாடலுக்கான வரிகளை Triad நிறுவனம் எழுதியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குறித்த பாடலை வெளியிட்டு வைக்கும் விசேட வைபவம் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய அதிகாரிகள், டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அபே கொல்லோ பாடலைப் பாடிய பாடகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த வைபவத்தில் கலந்துகொண்டு இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் ஜயந்த தர்மதாச கருத்து தெரிவிக்கையில்,

T20 உலகக் கிண்ணத்துக்கான பாடலை உருவாக்கியதற்கான டயலொக் ஆசியாட்டா நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் மனநிலையில் உத்வேகத்தைக் கொடுக்கும். ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளில் எமது வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததால் T20 உலகக் கிண்ணத்துக்கான சிறந்த அணியொன்றை எம்மால் இனங்கண்டுகொள்ள முடிந்தது” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ”இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகப்பூர்வ அனுசரணையாளராக இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் இலங்கை அணிக்கு முழு இலங்கை மக்களினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, இலங்கை அணியின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்கின்றோம்” என டயலொக் ஆசியாட்டா PLC நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் குழுமத்திற்கான பிரதானி அமலி நாணயக்கார தெரிவித்தார்.

T20 உலகக் கிண்ணத்திற்கான தமது முதல் தகுதிகாண் போட்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி அபுதாபியில் நமிபியாவினை இலங்கை அணி எதிர்கொள்கின்றது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…