இறுதிப்போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி; ஒரு நாள் தொடர் இலங்கை A வசம்

598
Sri Lanka A vs England Lions 5th ODI

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்று முடிந்திருக்கும், இரு தரப்பு ஒரு நாள் தொடரின் 5ஆவது போட்டியில், பந்து வீச்சு துறையில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து லயன்ஸ் அணி டக்வத்-லூயிஸ் முறையில் இலங்கை A அணியினை 12 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், ஒரு நாள் தொடரினை இலங்கை A அணி கைப்பற்றி இருந்தும், அணியின் குழாமில் இளம் வீரர்களிற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்த காரணத்தினால் அவ்வீரர்களிற்கு தீர்மானமிக்கதாக இப்போட்டி அமைந்திருந்தது.

போட்டியின், நாணயச் சுழற்சியினைக் கைப்பற்றிக் கொண்ட, இலங்கை A அணியின் தலைவர் அஷான் பிரியன்ஞன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காக பெற்றுக் கொண்டார்.

இதன்படி, இடது கை துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணத்திலக்க மற்றும் ரொன் சந்திரகுப்தா ஆகியோருடன் மைதானம் விரைந்த இலங்கை A அணி, தாம் எதிர் கொண்ட  ஐந்தாவது ஓவரில் தொடர்ச்சியாக இரு துடுப்பாட்ட வீரர்களை டொம் ஹெல்மின் வேகத்தினை தாக்குப் பிடிக்காமல் பறிகொடுத்தது.

இலங்கை A அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நோக்கி திரும்பியிருந்த ரொன்குப்தா 10 ஓட்டங்களினையும், அதனைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம ஓட்டம் ஏதுமின்றியும் வெளியேறியிருந்தார்.

தொடந்து, வந்த மத்திய வரிசை ஆட்டக்காரர்கள் அணிக்கு பிரயோஜனம் தரும் விதமாக எதனையும் செய்திருக்கவில்லை. எனினும், தனுஷ்க குணத்திலக்க மாத்திரம் பொறுப்பாக ஆடி, அரைச்சதம் கடந்து இத்தொடரில் தனது தொடர்ச்சியான சிறப்பாட்டத்தினை நிரூபித்திருந்தார்.

கிரேம் வைட் வீசிய பந்தில் வீழ்ந்த குணத்திலக்க, 58 பந்துகளிற்கு 6 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களினை விளாசியதோடு இத்தொடரில் மொத்தமாக 280 ஓட்டங்களினைக் குவித்தார். தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரின் போது காயமுற்று நாடு திரும்பிய குணத்திலக்க இத்தொடரில் அசத்தியிருப்பது தேசிய அணிக்கான அவரது வருகையை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றது.

குணத்திலக்கவின் விக்கெட்டினைத் தொடர்ந்து, ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை பின் வரிசையில் ஆடிய தசுன் சானக மற்றும் விக்கும் சஞ்சய ஆகியோர் பெற்றுக்கொண்ட பெறுமதி வாய்ந்த ஓட்டங்களால் உயர்த்தி, 150 ஓட்டங்களிற்குள் வீழ இருந்த இலங்கை A அணி, 46.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

இதில் தசுன் சானக்க மொத்தமாக, 32 ஓட்டங்களினையும் இறுதி வரை ஆட்டமிழக்காது நின்றிருந்த விக்கும் சஞ்சய 30 ஓட்டங்களினையும்  பெற்றிருந்தார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சில், இலங்கை தரப்பிற்கு அதிக இடைஞ்சல் தந்த வலதுகை வேகப்பந்துவீச்சாளர் டொம் ஹெல்ம் மொத்தமாக 33 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளை சுருட்டி, தனது வாழ்நாளில் List A போட்டியொன்றில் முதற்தடவையாக 5 விக்கெட்டுகளைப் பதிவு செய்து கொண்டார்.

பின்னர், 50 ஓவர்களில் 193 ஓட்டங்களினைப் பெற்றால் வெற்றி என பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 26.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

நிலைமை சீராகத காரணத்தினால், போட்டி மத்தியஸ்தர்கள் டக்வத் லூயிஸ் முறையில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் சார்பாக அதிகபட்சமாக, அவ்வணியின் தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் 38 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அத்துடன், இலங்கை A அணியின் பந்து வீச்சில் தனுஷ்க குணத்திலக்க மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியில், இலங்கை A தோல்வியை சந்தித்திருப்பினும் ஏற்கனவே தொடரில் நடைபெற்ற போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் காரணமாக, தொடரினை இலங்கை A  அணி 3-2 என கைப்பற்றிக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி – 192 (46.1) – தனுஷ்க குணத்திலக்க 51(58), தசுன் சானக்க 32(51), விக்கும் சஞ்சய 30*(30), ரமித் ரம்புக்வெல 23(34), டொம் ஹெல்ம் 33/5 (8.1), லியாம் லிவிங்ஸ்ட்டன் 27/2(10)

இங்கிலாந்து லயன்ஸ் அணி – 124/5 (26.3) – கீட்டன் ஜென்னிங்ஸ் 38(46), பென் டக்கெட் 28(23), சத்துரங்க டி சில்வா 20/2(6.3), தனுஷ்க குணத்திலக்க 25/2(5)

போட்டி முடிவு – இங்கிலாந்து லயன்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறையில்)