60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 41ஆவது போட்டி நேற்று பெங்களூர் சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விராத் கொஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா முதலில் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சச்சின் பேபி 13 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ரசிகர்களால் ஓட்டங்களை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கொஹ்லி 7 ஓட்டங்களையும், க்றிஸ் கெயில் 5 ஓட்டங்களையும் பெற்றனர்.

மும்பை அணியின் பந்துவீச்சில் க்ருனல் பாண்டியா,  டிம் சவ்தி மற்றும் மிச்சல் மெக்லனகஹன் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.

இதன் பிறகு 152 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு மும்பை  இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை இனிங்ஸின் 7ஆவது பந்திலேயே பார்த்தீவ் பட்டேல்  ஒரு ஓட்டத்தோடு ஆட்டம் இழந்தார். பின் ரோஹித் சர்மா மற்றும் அம்பாத்தி ராயுடு ஜோடி நிதானமான ஆட்டத்தைக் கையாண்டது.  ஆயினும் இரண்டாவது விக்கட்டுக்காக 58 ஓட்டங்களைப் பகிர்ந்த பின்  ரோஹித் ஷர்மா 25 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ரனா 9 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 47 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 44 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க, போலார்ட் மற்றும் பட்லர் ஜோடி இணைந்து சிக்ஸர் மழைகளைப் பொழிந்தது. போலார்ட் 2 சிக்ஸர்களையும் , பட்லர் 3 சிக்ஸர்களையும் பறக்க விட்டனர்.  இவர்களின் விளாசுதல் மூலம் மும்பை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோற்கடித்தது.

இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த போலார்ட் 19 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பட்லர் 11 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்று இருந்தனர். பெங்களூர் அணியின் பந்து வீச்சில் வருன் அரொன் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.   இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக க்ருனல் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்