பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Sri Lanka tour of Bangladesh 2021

291

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான புதிய அணித்தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வமான 18 பேர்கொண்ட குழாத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த திமுத் கருாணரத்னவை அணியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தீர்மானித்துள்ளதுடன், இவருக்கு பதிலாக இலங்கை ஒருநாள் அணியின் 24வது தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் சகிப், முஷ்தபிசூர் விளையாடுவதில் சிக்கல்?

திமுத் கருணாரத்ன இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக கடந்த 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டதுடன், இவரின் தலைமையில் இலங்கை அணி 17 ஒருநாள் போட்டிகள் விளையாடி 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இறுதியாக திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை அணி, ஐசிசி ஒருநாள் சுப்பர் லீக் தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டதுடன், தொடரில் 3-0 என தோல்வியடைந்தது. டெஸ்ட் போட்டிகளில், திமுத் கருணாரத்ன தலைவர் மற்றும் வீரராக சிறப்பாக செயற்பட்டாலும், ஒருநாள் போட்டிகளில் அவருக்கான இடம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகவே, அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனவே, பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தனுஷ்க குணதிலக்க மற்றும் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குசல் பெரேரா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக செயற்படவுள்ளனர். அவிஷ்க பெர்னாண்டோ உபாதை மற்றும் உடற்தகுதி சிக்கல்களால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவரை நியமித்துள்ளதுடன், இளம் வீரர்களுடன் அணியை அழைத்துச்செல்வதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், திசர பெரேரா ஓய்வை அறிவித்திருக்கும் அதேநேரம், சுரங்க லக்மால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதிய அணித்தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதுடன், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மீண்டும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அணியில் இணைக்கப்பட்டது மாத்திரமின்றி, அணியின் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஓருநாள் அணித்தலைவருக்கான போட்டியில் இருக்கும் தற்போதைய T20I அணித்தலைவரான தசுன் ஷானகவும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழாத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. கழக மட்ட ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்த வேகப்பந்துவீச்சாளர்களான பினுர பெர்னாண்டோ மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர். பினுர பெர்னாண்டோ 8 கழகமட்ட ஒருநாள் போட்டிகளில் 23 விக்கெட்டுகளையும், ஷிரான் பெர்னாண்டோ 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்களுடன் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான சாமிக்க கருணாரத்னவும் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

அனுப வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதான பங்களாதேஷ் தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்துள்ளதுடன், துஷ்மந்த சமீர மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். முதன்மை சுழல் பந்துவீச்சாளராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அகில தனன்ஜய சுழல் பந்துவீச்சாளராக இடம்பிடித்துள்ளனர்.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் கடந்த 10ம் திகதி உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுத்ததுடன், எதிர்வரும் 16ம் திகதி பங்களாதேஷ் செல்லவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள், இம்மாதம் 23, 25 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

குறித்த இந்த தொடரையடுத்து இலங்கை அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20I மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. T20I போட்டிகள் ஜூன் 23, 24 மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகள் ஜூன் 29, ஜூலை 1 மற்றும் ஜூலை 4ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இலங்கை – பங்களாதேஷ் ஒருநாள் தொடர் அட்டவணை வெளியீடு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என இழந்த இலங்கை அணி, ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரின் புள்ளிகளை பெறுவதற்கு, பங்களாதேஷ் தொடரை கட்டாயமாக வெற்றிக்கொள்ள வேண்டும். உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிகள் 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெறுவதில் முக்கிய செல்வாக்கு செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம்

குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ் (உப தலைவர்), தனுஷ்க குணதிலக்க, பெதும் நிஸ்ஸங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அஷேன் பண்டார, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, சாமிக கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, துஸ்மந்த சமீர, ஷிரான் பெர்னாண்டோ, 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…