ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

Sir John Tarbat Junior Athletics Championship 2022

124

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் காற்று மாசுபாட்டுடன் கூடிய அபாய நிலைமை காரணமாக நாளை (09) ஆரம்பமாகவிருந்த சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, போட்டித் தொடருக்கான புதிய திகதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Ritzbury சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரண்டு தினங்களில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவிருந்தது.

இம்முறை போட்டித் தொடருக்காக நாடாளவிய ரீதியில் இருந்து சுமார் 3500 மாணவர்கள் கலந்துகொள்ளவிருந்ததுடன், இதில் 12, 13, 14 மற்றும் 15 ஆகிய வயதுப் பிரிவுகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப் போட்டித் தொடருக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கான ஆரம்ப சுற்றுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் அநுராதபுரம், அம்பிலிபிட்டிய மற்றும் பண்டராகம ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்பட்டதுடன், இதில் நாடாளவிய ரீதியில் இருந்து சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த போட்டித் தொடரின் மூலம் எமது நாட்டின் மெய்வல்லுனர் விளையாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் திறமையான 15 கனிஷ்ட வீரர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, 90ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<