மலோனி விஜேசிங்க காலமானார்

111

இலங்கை வலைப்பந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக எதிர்கால எதிர்பார்ப்பாக இருந்த வலைப்பந்து வீராங்கனை மலோனி விஜேசிங்க இன்று (20)  காலை கலமானார்.

இரத்தப் புற்று நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 17 வயது மாத்திரமாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அகில இலங்கை வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியின்போது சுகவீனமுற்ற மலோனி விஜேசிங்க, மருத்துவ சோதனையில் நோய் தீவிரமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவரது குடும்ப வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அவரது நோய் தீவிரம் அடைந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.   

விசாகா கல்லூரி மாணவியான மெலோனி 2017 இல் 8 ஆவது இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் இலங்கைக்காக விளையாடி, போட்டிகளில் சோபித்ததோடு எதிர்கால நட்சத்திரமாக உருவெடுக்கும் நம்பிக்கையையும் விதைத்தார்.

6’ 3” உயரம் கொண்ட மெலோனி இலங்கை வளர்ந்துவரும் குழாமில் இடம்பிடித்ததோடு இந்த ஆண்டு ஜூனில் இலங்கை இளையோர் அணிக்கு உப தலைவியாகவும் நியமிக்கப்பட்டார். கோல் ஷூட்டராக ஆதிக்கம் செலுத்தும் அவர் தொடரில் இலங்கை அணி 3 ஆவது இடத்தை பிடிப்பதற்கும் பிரதான பங்காற்றினார். 

களத்தில் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்த அவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றும் உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று ஒரு மருத்துவராக வருவதற்கு எதிர்பார்த்திருந்தார்.