கேகலு அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி

162

சிங்கர் நிறுவனம், டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், கேகலு வித்தியாலத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்தது.

கடந்த வியாழக்கிழமை (2) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மைதானச் சொந்தக்காரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கேகலு வித்தியாலய வீரர்களுக்கு வழங்கினர்.

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் நிறுனம் 19 வயதுக்குட்பட்ட……

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய கேகலு வித்தியாலய அணி 60.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களைக் குவித்தது. கேகலு வித்தியாலய துடுப்பாட்டம் சார்பில் புலஸ்தி அத்தபத்து 60 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் என்டன் அபிஷேக் 4 விக்கெட்டுக்களையும், வினோஜன் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை சென். ஜோன்ஸ் வீரர்கள் ஆரம்பித்தனர். தொடர்ந்து, யாழ்ப்பாண வீரர்களின் துடுப்பாட்டம் சார்பாக வினோஜன் (50) மற்றும் சௌமியன் (50) ஆகியோர் அரைச்சதங்கள் விளாசினர். இந்த இரண்டு வீரர்களினதும் அரைச்சத உதவியோடு சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 47 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்கள் பெற்ற போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. கேகலு அணியின் பந்துவீச்சில் அயேஸ் தாரக்க மற்றும் மாலக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

Photos: St. John’s College Jaffna vs Kegalu Vidyalaya, Kegalle | U19 Cricket Tournament 2019/20

சென். ஜோன்ஸ் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து 77 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய கேகலு வித்தியாலய அணி இம்முறை மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 95 ஓட்டங்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

கேகலு அணியின் துடுப்பாட்டம் சார்பில் மீண்டும் ஒரு தடவை போராட்டம் காட்டிய புலஸ்தி அத்தபத்து 49 ஓட்டங்களைக் குவித்தார். அதேநேரம், ஏற்கனவே பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் அசத்திய வினோஜன் கேகலு வீரர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்காக 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரோடு, விதுஷன் 3 விக்கெட்டுக்களுடன் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார்.

மோசமான துடுப்பாட்டத்தினால் தோல்வியடைந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி

சிங்கர் நிறுவனம் 19 வயதுக்கு உட்பட்ட…..

கேகலு அணியின் மோசமான துடுப்பாட்டைத் தொடர்ந்து சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 18 ஓட்டங்கள் மாத்திரமே நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கிற்காக இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி குறித்த வெற்றி இலக்கினை 2 விக்கெட்டுக்களை இழந்து 19 ஓட்டங்களுடன் அடைந்தது. 

போட்டியின் சுருக்கம்

கேகலு வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 130 (60.5) – புலஸ்தி அத்தபத்து 60, என்டன் அபிஷேக் 4/12, வினோஜன் 2/35

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 207/9 (47) – வினோஜன் 50, சௌமியன் 50, டினோஷன் 42*, அயேஸ் தாரக்க 2/33, மாலக்க 2/48

கேகலு வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 95 (43) – புலஸ்தி அத்தபத்து 49, வினோஜன் 5/34, விதுஷன் 3/21, சரண் 2/19

சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 19/2(17)

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<