இலங்கை மோதலில் அயர்லாந்து அணியின் ஆதிக்கமா?

292

T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றுக்கு குழு A இல் இருந்து  முன்னேறியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்த சுற்றில் முதலாவதாக விளையாடும் போட்டி நாளை (22) அயர்லாந்து அணியுடன் ஹோபர்ட் நகரில் ஆரம்பமாகின்றது.

கவனிக்க வேண்டிய விடயங்கள்

மழையின் தாக்கம்

எதிர்பார்க்காத திருப்பங்களை இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் மழை ஏற்படுத்தும் என்றே எண்ண முடிகின்றது. இலங்கை – அயர்லாந்து போட்டி நடைபெறவுள்ள ஹோபர்ட் மைதானத்தில் இன்று (22) காலை இலங்கை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தும் அவை மழையின் காரணமாக கைவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் கிடைத்திருக்கும் வானிலைத் தரவுகள் போட்டி நடைபெறும் ஹோபர்ட் நகரில் நாளையும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் 50% இருப்பதாக எதிர்வு கூறியிருக்கின்றன.

உலகக் கிண்ணத்திலிருந்து ஆஸி., இங்கிலாந்து வீரர்கள் விலகல்

அதேநேரம் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் La Niña என்னும் தோற்றப்பாடு இந்தியா – பாகிஸ்தான் மோதல் உட்பட உலகக் கிண்ணத் தொடரின் ஏனைய போட்டிகளையும் பாதிக்கலாம் என அவுஸ்திரேலியாவின் Fox News நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே மழையின் குறுக்கீடு இல்லாத சந்தர்ப்பத்திலேயே இலங்கை – அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியினை முழுமையாகப் பார்வையிட முடியும்.

அயர்லாந்தின் ஆதிக்கம்

T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் மூன்றினையும் அயர்லாந்து அணி, இலங்கை – அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டி ஆடவுள்ள ஹோபர்ட் அரங்கிலேயே ஆடியிருந்தது.

மறுமுனையில் இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் நமீபிய அணியுடன் ஜீலொங் நகரில் வைத்து மோதி அதில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இதன் பின்னர் இலங்கை அணியின் வீரர்கள் குறித்த மைதானத்தில் போதிய அனுபவமின்மையே (Exposure) அந்த அதிர்ச்சி தோல்விக்கு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் போது இலங்கை அணியினை விட ஹோபர்ட் மைதானத்தில் அயர்லாந்து அணி அதிக அனுபவம் கொண்டதாக காணப்படுகின்றது. ஏனெனில் ஹோபர்ட் மைதானத்தில் இலங்கை அணி இன்னும் இந்த உலகக் கிண்ணத்தில் போட்டியில் ஆடவில்லை. இது இப்போட்டியில் இலங்கையினை விட அயர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணமாக அமைந்து விட முடியும்.

T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் ஐ.சி.சி. இன் அங்கத்துவ அணிகள் எதற்கும் சளைத்தவை அல்ல என்பதனையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. இதில் அயர்லாந்து இரண்டு தடவைகள் T20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியினையும் தொடரிலிருந்து வெளியேற்றியிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக ஒப்பிட்டு அளவில் இலங்கையினை விட அதிக T20I போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களையும் தமது குழாத்தில் அயர்லாந்து அணி கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை – அயர்லாந்து மோதலில் இலங்கை அணியினை விட ஆதிக்கம் செலுத்த மேலதிக காரணங்களாக இருக்க முடியும்.

இலங்கை வீரர்களின் உபாதை  

இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னணி வீரர்களான துஷ்மன்த சமீர போன்றோரின் உபாதைகள் ஏற்கனவே தலையிடியினைத் தோற்றுவித்திருக்கின்றது. இந்த வரிசையில் அடுத்ததாக பெதும் நிஸ்ஸங்கவும் அயர்லாந்து மோதலில் மேல் தொடை (Groin) உபாதை காரணமாக முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் அவர் T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியதாக எந்த அறிக்கையும் இன்னும் வெளியிடப்படவில்லை. மறுமுனையில் வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுசான் உபாதையில் இருந்து மீண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அவரும் அயர்லாந்து அணி மோதலில் பங்கெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

MRI பரிசோதனைக்கு முகங்கொடுத்துள்ள பெதும்

எனவே இலங்கை அணியுடனான போட்டியில் நாளை புதிய துடுப்பாட்டவீரரான அஷேன் பண்டாரவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இலங்கை அணி

இலங்கை அணி சுபர் 12 சுற்றுக்கு தெரிவான போதும் இலங்கை அணியில் சரி செய்யப்பட வேண்டிய விடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் இன்னும் எதிர்பார்த்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க தவறுகின்றனர். அணியின் முதுகெலும்பாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் மத்திய வரிசை வீரர்களும் ஜொலிப்பது கிடையாது.

அதாவது கடந்த இரண்டு போட்டிகளில் குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகிய வீரர்கள் தனி நபர்களாக வெளிப்படுத்திய துடுப்பாட்ட இன்னிங்ஸ்களே இலங்கை சவாலான வெற்றி இலக்கு ஒன்றை நிர்ணயிக்க காரணமாக அமைந்தன. மற்றைய வீரர்களில் ஓரிருவரைத் தவிர ஒரு அணியாக துடுப்பாட்டத்தில் சாதிக்க இலங்கை தடுமாறுகின்றது. இந்த விடயங்கள் சரி செய்யப்பட வேண்டும்.

அத்துடன் கடந்த போட்டிகளில் டில்சான் மதுசங்க, துஷ்மன்த சமீர ஆகியோர் இல்லாத நிலையில் சற்று அனுபவம் குறைந்ததாக இலங்கையின் வேகப்பந்துவீச்சு வரிசை இருப்பது வெளிக்காட்டப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்திற்கு தீர்வு காணப்படாத போது வேகப்பந்துக்கு சாதகமான அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இலங்கை அணி அடுத்து வரும் போட்டிகளில் பின்னடைவினைச் சந்திக்க முடியும்.

ஆனால் இலங்கை அணியின் களத்தடுப்பு மற்றும் சுழல்பந்துவீச்சு என்பன தொடரில் சிறப்பாக அமைந்ததனை பாராட்டாமல் இருக்க முடியாது.

எதிர்பார்ப்பு XI – தசுன் ஷானக்க (தலைவர்), அஷேன் பண்டார, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ

அயர்லாந்து அணி 

கிரிக்கெட் உலகில் அயர்லாந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கும் அணிகளில் ஒன்றாக மாற நீண்ட காலம் எடுக்கப் போவதில்லை. இலங்கை அணியுடன் அவர்கள் இதுவரை T20I போட்டி ஒன்றில் வெற்றி பெறவில்லை என்ற போதும் அயர்லாந்து அணி, தமது இறுதிப் போட்டியில் முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்ட விதம் இலங்கை மோதலில் அவர்கள் வரலாற்றை மாற்றும் சம்பவம் ஒன்றை செய்வதற்கான அறிகுறியாக இருக்கின்றது.

அணியின் துடுப்பாட்டவீரர்களில் முக்கியமான வீரர்களாக போல் ஸ்டேர்லிங், லோர்கன் டக்கர், ஜோர்ஜ் டக்ரெல் ஆகியோர் இருக்கின்றனர். இதில் 100 T20I போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவம் கொண்டிருக்கும் ஜோர்ஜ் டக்ரெல் கடைசியாக தான் விளையாடிய 83.33 என்கிற அபாரமான துடுப்பாட்ட சராசரியினை வெளிப்படுத்தி இருப்பதோடு, 150 கிட்டவான Strike Rate உடன் ஓட்டங்கள் பெற்ற வீரராக காணப்படுகின்றார்.

T20 உலகக் கிண்ணத்தில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேற்றம்

பந்துவீச்சினை நோக்கும் போது மணிக்கட்டு சுழல்வீரர் கரேத் டேலானி, வெறும் 22 வயதே நிரம்பிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் லிட்டில் ஆகியோர் இலங்கை அணிக்கு நெருக்கடி தர எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர்.

எதிர்பார்ப்பு XI – போல் ஸ்டெர்லிங், அன்டி பல்பைர்னி (தலைவர்), லோர்கன் டக்கர், ஹர்ரி டெக்டர், கேர்டிஸ் கேம்பர், ஜோர்ஜ் டொக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடைர், சிமி சிங், பெர்ரி மெக்கார்த்தி, ஜோஸ் லிட்டில்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<