லசித உடகே 7 விக்கெட்டுகள்: முதல் இன்னிங்சில் முன்னிலை அடைந்த புனித மரியார் கல்லூரி

439

19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக இன்றைய தினம் மொத்தமாக 5 போட்டிகள் நடைபெற்றன. அந்த வகையில் கண்டி திரித்துவக் கல்லூரி பல்வேறு துறைகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் துரதிஷ்டவசமாக போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. அதேநேரம், ஒரு போட்டி இன்றைய தினம் ஆரம்பித்த நிலையிலும், ஏனைய நான்கு போட்டிகளும் சமநிலையில் நிறைவுற்றன.

புனித மரியார் கல்லூரி, கேகாலை எதிர் மொறட்டு வித்தியாலயம்

மொறட்டு வித்தியாலய மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித மரியார் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி, 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சுக்காக 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மொறட்டு வித்தியாலய பந்து வீச்சாளர் ஷெஹத சொய்சாவின் அதிரடி பந்து வீச்சில் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றாலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதரு ஸ்ரியஷாந்த 52 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். அதேநேரம் தமிந்து சந்திரசிறி ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்று பங்களிப்பு செய்தார்.

அதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய மொறட்டு வித்தியாலயம், லசித உடகேவின் அதிரடி பந்து வீச்சில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது. எனினும், தடுத்தாடிய ஷெஹத சொய்சா 45 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

புனித மரியார் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்): 160 (43.5) – சதரு ஸ்ரியஷாந்த 52, தமிந்து சந்திரசிறி 29*, சஞ்சீவ ரஞ்சித் 28, ஷெஹத சொய்சா 5/40, நஜ்ஜித் நிஷேந்த்ர 2/27

மொறட்டு வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்): 110 (43.1) – ஷெஹத சொய்சா 45, லசித உடகே 7/41, சஞ்சய ரஞ்சித் 3/21


ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு

143 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இரண்டாம் நாளாக துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஸாஹிரா கல்லூரி சகல விக்கெட்டுகளையும் 197 ஓட்டங்களுக்கு இழந்தது. அவ்வணி சார்பாக முஹம்மத் ஷாமாஸ் 71 ஓட்டங்களை குவித்தார். 83 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி வேகமாக ஓட்டங்களை குவித்தனர். அந்த வகையில் சாலக்க பண்டார, கனிது தெவ்மின மற்றும் தில்ஷான் சிகெரா அதிரடியாக ஓட்டங்களை பெற்று 55.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி 110 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், போதிய நேரமின்மை காரணமாக போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம் :

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ்): 221 (52.5) – சமோத் விக்ரமசூரிய 48, ஹஷான் பிரியதர்ஷன 44, சசிந்த லியனகே 28, முஹம்மத் ரிபாஸ் 22, சஜித் சமீர 5/38, முஹம்மத் நஜாத் 2/33

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்க்ஸ் ): 197 (51.1) – முஹம்மத் ஷமாஸ் 72, அரவிந்த் 34, சஜித் சமீர 26, சமோத் விக்கிரமசூரிய 4/39, சாலக்க பண்டார 3/21

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (இரண்டாம் இன்னிங்ஸ்): 304 (55.2) – சாலக்க பண்டார 71, கனிது தெவ்மின 64, தில்ஷான் சிகெரா 58, சமோத் விக்ரமசிங்க 50, முஹம்மத் நஜாத் 3/37, முஹம்மத் டில்ஹான் 2/32, சஜித் சமீர 2/80

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ் ): 110/3 (12.4) – முஹம்மத் நஜாத் 61, முஹம்மத் நஜாத் 35

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு

5 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த கொழும்பு றோயல் கல்லூரி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதிக பட்ச ஓட்டங்களாக ஹெலித விதானகே 57 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்திய ஷனோகீத் சண்முகநாதன் 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து களமிறங்கிய கண்டி திரித்துவக் கல்லூரி, 3 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இரண்டாம் இன்னிங்சிலும் சிறப்பாக துடுப்பாடிய ஷனோகீத் சண்முகநாதன் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும், போதிய நேரமின்மை காரணமாக போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 321/6d (78.1) – ஹசித்த போயகொட 139, ஷனோகீத் சண்முகநாதன் 65, சானுக்க பண்டார 46, உவின் ஹேரத் 2/69, அஹிஷேக் மேத்தா 2/40

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 212 (60.5) – ஹெலித விதானகே 57, பசிந்து சூரியபண்டார 37, ஷனோகீத் சண்முகநாதன் 5/69

திரித்துவக் கல்லூரி, கண்டி (இரண்டாம் இன்னிங்ஸ்): 105/3 (16) – ஷனோகீத் சண்முகநாதன் 61*

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


டி மெசனொட் கல்லூரி, கந்தானை எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

143 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்றைய நாளுக்காக துடுப்பாடிய புனித பெனடிக்ட் கல்லூரி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. சிறப்பாக சிறப்பாக துடுபாடிய ஷிஹான் பெர்னாண்டோ 104 ஓட்டங்களை அணி சார்பாக பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து 136 ஓட்டங்கள் பின்னிலையுற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த டி மெசனொட் கல்லூரி 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் போதிய நேரமின்மை காரணமாக போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்): 134 (39.5) – சந்தீப் தேஷான் 38, பிரவீண் பொன்சேகா 38, மஹீஷ் தீக்ஷன 4/30, சமிந்து விஜேசிங்க 4/29

புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 270/8d (70.1) – ஷிஹான் பெர்னாண்டோ 104, சமிந்து விஜேசிங்க 68, ரோஷித செனவிரத்ன 3/66, சஷான் தினெத் 2/46

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (இரண்டாம் இன்னிங்ஸ்): 81/2 (17) – சங்கீத் தேஷான் 28*

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் குருகுல கல்லூரி, களனி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக சமநிலையில் முடிவுற்றது. நேற்றைய தினம் ஆரம்பித்திருந்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி லசித் க்ரூஸ்புள்ளேயின் 83 ஓட்டங்களின் உதவியுடன் 205 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றிருந்தது.

அதனையடுத்து களமிறங்கியிருந்த குருகுல கல்லூரி, பசிந்து உசெத்தியின் அதிரடி பந்து வீச்சில் 144 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவ்வணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக அச்சிந்த மல்ஷான் 46 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். அந்தவகையில் 61 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் மீண்டும் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 76 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டினை இழந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்:

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 205 (42) – லசித் க்ரூஸ்புள்ளே 83, ரவிந்து பெர்னாண்டோ 39, ஷங்க பூர்ண 24, ப்ருத்துவி ருசார 6/45

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 144 (36.5) – அச்சிந்த மல்ஷான்  46, பசிந்து உசெத்தி 4/50, சச்சிந்து கொலம்பகே 2/29

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 76/2 (16) – லசித் க்ரூஸ்புள்ளே 50

போட்டி முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.