அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியிடம் மீண்டும் வீழ்ந்த இலங்கை

1284

சுற்றுலா இலங்கை கனிஷ்ட அணி மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இளையோர் ஒரு நாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டி 102 ஓட்டங்களால் இலங்கை கனிஷ்ட அணியை அபாரமாக அவுஸ்திரேலிய கனிஷ்ட வெற்றிகொண்டது.

த்ரில்லர் வெற்றியுடன் தொடரை சமப்படுத்திய இலங்கை கனிஷ்ட அணி

நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான இளையோர் ஒரு நாள் தொடரின்..

ஹொபர்ட் நகரில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் தலைவர் தமது அணிக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி துடுப்பாடியிருந்த அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் முதல் விக்கெட்டினை போட்டியின் இரண்டாம் பந்திலேயே வீழ்த்திய திரித்துவ கல்லூரி வீரர் ரஷ்மிக்க தில்ஷான் சிறப்பான ஆரம்பத்தினை இலங்கை கனிஷ்ட அணிக்குப் பெற்று தந்திருந்தார்.

எனினும் மூன்றாம் இலக்கத்தில் ஆடியிருந்த ஜெக் எட்வர்ட்ஸ் மற்றும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் றெயான் ஹேக்னி ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டம் (103) ஒன்றினை இரண்டாம் விக்கெட்டிற்காக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஹேக்னி 39 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்ப 115 பந்துகளுக்கு ஜெக் எட்வர்ட்ஸ் 7  பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கலாக 95 ஓட்டங்களைப் பெற்று சதத்தினை தவறவிட்டார்.

பின்னர் மத்திய வரிசையில் சிறப்பாக செயற்பட்ட அணித்தலைவர் வில் சதர்லேன்ட் மற்றும் ஒஸ்டின் வோஹ் ஆகியோரின் பெறுமதி வாய்ந்த ஓட்ட சேர்ப்புக்களுடன் 50 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைக் குவித்துக்கொண்டது.

இதில் ஒஸ்டின் வோஹ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 40 ஓட்டங்களுடன் நிற்க சதர்லேன்ட் விரைவாக துடுப்பாடி வெறும் 33 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், செபஸ்டியன் கல்லூரி வீரர் பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து 252 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு மைதானம் விரைந்த இலங்கை இளம் அணிக்கு வீசப்பட்ட ஓவரின் முதல் ஓவரிலேயே விக்கெட்டினை கைப்பற்றி அவுஸ்திரேலிய இளம் வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனால், ஆரம்ப வீரராக வந்த லசித் குருஸ்புள்ளே ஓட்டம் ஏதுமின்றி மைதானத்தினை விட்டு வெளியேறி ஏமாற்றினார். தொடர்ந்து வந்த வீரர்களில் அனைவரையும் நுணுக்கமான முறையில் பந்துவீசி, அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி வீரர்கள் ஓய்வறை நோக்கி அனுப்பினர்.

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் பந்து வீச்சினை சமாளிப்பதில் பாரிய சிக்கலுக்கு உள்ளாகிய இலங்கை கனிஷ்ட அணியினர் 32.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியடைந்தனர்.

இலங்கை கனிஷ்ட அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஏனைய எந்தவொரு வீரரும் 20 ஓட்டங்களையேனும் கடக்காத நிலையில் புனித ஜோசப் கல்லூரி வீரர் ஜெஹான் டேனியல் மாத்திரம் தனியொருவராக இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 84 பந்துகளுக்கு 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி சார்பில் பந்து வீச்சில், றெயான் ஹெட்லி மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, லொய்ட் போப் 3 விக்கெட்டுகளைப் பெற்று போட்டியின் வெற்றியாளர்களாக தமது அணியை மாற்றியிருந்தனர்.

இப்போட்டியின் வெற்றியுடன் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி – 251/7 (50) ஜெக் எட்வர்ட்ஸ் 95, வில் சதர்லேன்ட் 49, ஒஸ்டின் வோஹ் 40*, றெயான் ஹேக்னி 39, பிரவீன் ஜயவிக்ரம 56/2, கமிந்து மெண்டிஸ் 17/1

இலங்கை கனிஷ்ட அணி – 149 (32.4) ஜெஹான் டேனியல் 55*, றெயான் ஹெட்லி 61/4, லொய்ட் போப் 46/3

போட்டி முடிவு அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 102 ஓட்டங்களால் வெற்றி

இரு அணிகளும் பங்கு பெற்றும் தொடரின் நான்காவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகின்றது.