மிரெக்ஷஷ் நேஷன் கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளில் இலங்கைக்கு தோல்வி

Mirxes Nations Cup 2023

86

சிங்கபூரில் நடைபெற்றுவரும் மிரெக்ஷஷ் நேஷன் கிண்ண (Mirxes Nations Cup) வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை அணி தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

கனடா, சிங்கபூர், சிங்கபூர் A, பப்புவா நியூகினியா, குக் தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய 6 அணிகள் மிரெக்ஷஷ் நேஷன் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் மோதி வருகின்றன.

>> வலைப்பந்திற்கு விடை கொடுக்கும் தர்ஜினி சிவலிங்கம்

சிங்கபூரில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் தங்களுடைய முதல் போட்டியில் கனடா அணியை இலங்கை அணி எதிர்கொண்டு 46-50 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் முதல் காற்பகுதியில் 16-12 என்ற முன்னிலையுடன் கனடா அணி ஆட்டத்தை ஆரம்பிக்க, இரண்டாவது காற்பகுதியிலும் அபாரமாக ஆடி 30-23 என முதல் பாதியை நிறைவுசெய்தது. மூன்றாவது காற்பகுதியில் 6 புள்ளிகள் முன்னிலையில் 39-33 என்ற புள்ளிகளை கனடா பெற்றுக்கொண்டதுடன், இறுதி காற்பகுதியில் இலங்கை அணி சற்று சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் 50-46 என்ற புள்ளிகள் கணக்கில் கனடா அணி வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற போட்டியில் சிங்கபூர் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 51-62 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கபூர் A அணியிடம் தோல்வியடைந்தது.

போட்டியின் ஆரம்பம் முதல் சிங்கபூர் அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது. முதல் காற்பகுதியில் 15-09 என்ற முன்னிலையை பெற்றுக்கொண்ட சிங்கபூர் A அணி, முதல் பாதியில் 29-22 எனவும், மூன்றாவது காற்பகுதியில் 45-36 என்ற முன்னிலைகளுடன் போட்டியை 62-51 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்டது.

முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி தங்களுடைய மூன்றாவது போட்டியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) குக் தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிரெக்ஷஷ் நேஷன் கிண்ண தொடருக்கான இலங்கை குழாம்

துலாங்கி வன்னிதிலக்க (தலைவி), ரஷ்மி ஒபேசேகர,  சச்சினி ரொட்ரிகோ, ஹன்சிமா திசாநாயக்க, ருக்சலா ஹப்புஆராச்சி, செமினி எல்விஷ், கயான்ஜலி அமரவன்ச, ரஷ்மி திவ்யான்ஜலி, இமேஷா பெரேரா, பாஷானி டி சில்வா, சுசீமா பண்டார

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<