‘கோலி ஓய்வுபெற வேண்டும்’ – அக்தர் வேண்டுகோள்

ICC T20 World Cup 2022

199

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி T20 கிரிக்கெட்டில் இருந்து து ஓய்வை அறிவித்துவிட்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சு நட்சத்திரம் சொயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைக்காலமாக சர்வதேசப் போட்டிகளில் தடுமாறி வந்த விராட் கோலி, கடந்த மாதம் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சுபர் 12 சுற்றுக்கான முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது.

குறித்த போட்டியில் துடுப்பாட்டத்தில் வலுச்சேர்த்த கோலி, 53 பந்துகளில் 82 ஓட்டங்களைக் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் சொயிப் அக்தர், பாகிஸ்தானுக்கு எதிராக அவர் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸை விளையாடி இருக்கிறார். என்னால் முடியும் என்று நம்பிக்கையின் வெளிப்பாடாக தான் அவருடைய ஆட்டம் அமைந்தது. விராட் கோலி கடந்த 3 ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனத்தை சந்தித்தார்.

கோலி ஓட்டங்களைக் குவிக்கவில்லை. அவருடைய தலைவர் பதவி பறிக்கப்பட்டது. பலதரப்பு மக்கள் அவரை பல விதமாக பேசினார்கள். சில தரப்பினர், அவருடைய குடும்பத்தினரை எல்லாம் இழுத்து அவரது மனதை காயப்படுத்தினார்கள். ஆனால், கோலி எதையும் பற்றி கவலைப்படாமல் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்தி இருக்கிறார்.

அதுவும் தீபாவளிக்கு முதல் நாள் அவருடைய ஆட்டம் பட்டாசு போல் அமைந்தது. T20 உலகக் கிண்ணம் போன்ற ஒரு தொடரில் அவர் போர்ம்க்கு திரும்பி கலக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறார் என நினைக்கிறேன். கோலி என்ற மன்னன் திரும்ப வந்துவிட்டார். அவருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர்.

இந்த தருணத்தில் கோலிக்கு நான் ஒரு அறிவுரை வழங்குகிறேன். T20 கிரிக்கெட் என்பது நமது அனைத்து சக்தியை திரட்டி விளையாட வேண்டும். அவருடைய முழு சக்தியையும் T20 கிரிக்கெட்டுக்கு செலவிடுவதை நான் விரும்பவில்லை. இதே போன்ற உத்வேகத்தை பயன்படுத்தி கோலி சர்வதேச ஒருநாள் போட்டியில் 3 சதங்கள் அடித்திருக்கலாம். அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் மேலும் சில சதங்களை அடிக்க முடியும். டெஸ்ட்டிலும் ஓட்டங்களைக் குவிக்க முடியும். இதற்குதான் அவர் ஆற்றலை அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் விராட் கோலி விரைவில் T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<