பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகள் 

78

சுமார் 10 வருட காலத்திற்குப் பின்னர் இலங்கை அணியின் சுற்றுப்பயணம் மூலம் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதற்காக பாகிஸ்தானுக்கு டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி குறித்த சுற்றுப்பயணத்தில், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக அந்நாட்டு அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.  

அந்தவகையில் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் போட்டிகள் மூலமே பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. 

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம்!

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான குழாத்தை தெரிவுசெய்யும்….

இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டி நகரில் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் கராச்சி நகரில் இடம்பெறவிருக்கின்றது. 

பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்த பாரிய சிக்கல்களை உருவாக்கியிருந்தன. எனினும், இலங்கை அணியின் அண்மைய பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் அந்நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் மீள இடம்பெறுவதற்கான அடித்தளம் ஒன்றை இட்டிருந்தது.

இந்த அண்மைய சுற்றுப்பயணத்தை அடிப்படையாக கொண்டே பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமைகள் சிறந்த நிலையில் இருப்பதாக கருத்திற்கொள்ளப்பட்டு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் போட்டிகளும் அங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கை அணியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் போட்டிகளை பாகிஸ்தானில் வைத்து விளையாட இருக்கும் செய்தியினை இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உறுதி செய்திருந்தார்.

“நாம் பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விடயத்தினை உங்களுக்கு உறுதி செய்வதில் சந்தோஷமடைகின்றேன். நாம் எமது கடந்த சுற்றுப்பயணம் மூலம் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதற்கான சாதகமான சூழல் இருப்பதை அறிந்திருந்தோம்.”

“அதோடு எல்லா நாடுகளும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என நம்புகின்றோம். அதோடு, எமது இந்த உறவு மூலம் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் மீள ஒரு பங்கினை வழங்கியிருப்பதிலும் மகிழ்கின்றோம். வரலாற்றில் பாகிஸ்தான் ஆனது ஒரு கிரிக்கெட் அணியாக எமக்கு மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தது.” 

Murali, Mendis இற்குப் பின் இலங்கை இனம்கண்ட சுழல் வீரர் Kevin? | Cricket Galatta

ThePapareTamil #CricketGalatta இலங்கை கிரிக்கெட் அணி…

“நாம் எமது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளை நியூசிலாந்து அணியுடன் ஆரம்பித்திருந்தோம். கடந்த காலம் போன்று (பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள) இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் போட்டித்தன்மை கொண்டதாகவும், சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம். இதனால், கிரிக்கெட் இரசிகர்களுக்கும் சிறந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கூடிய ஒரு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.”

இதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனரான ஸாகிர் கான் தமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் வரும் இலங்கை அணிக்கு தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.

டெஸ்ட் தொடர் அட்டவணை

டிசம்பர் 11-15 – முதல் டெஸ்ட் போட்டி – பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி

டிசம்பர் 19-23 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – தேசிய மைதானம் – கராச்சி 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க