T20 உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் பினுர பெர்னாண்டோ!

ICC T20 World Cup 2022

548

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ உபாதை காரணமாக T20 உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறுவதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற போட்டியின் போது பினுர பெர்னாண்டோ உபாதைக்கு முங்கொடுத்திருந்தார். இவர் முதல் 5 பந்துகளை மாத்திரம் வீசியதுடன் களத்திலிருந்து வெளியேறினார்.

அவுஸ்திரேலிய அணிக்கு T20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றி

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பினுர பெர்னாண்டோ முழு தொடரிலிருந்து வெளியேறியுள்ளதுடன், மீண்டும் நாடு திரும்புகிறார் என்ற அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இலங்கை அணியை பொருத்தவரை T20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டிக்கு முன்னர் டில்ஷான் மதுசங்க உபாதைக்கு முகங்கொடுத்ததுடன், துஷ்மந்த சமீர ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான போட்டியை அடுத்து உபாதைக்குள்ளானார். தொடர்ந்து பிரமோத் மதுசான் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த போதும், அவர் உடற்தகுதியுடன் திரும்பியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் மேற்குறித்த வீரர்களுடன் பினுர பெர்னாண்டோ உபாதைக்கு முகங்கொடுத்திருக்கின்றார். பினுர பெர்னாண்டோ உபாதைக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக யார் குழாத்துக்குள் வரவழைக்கப்படுவார் என அறிவிக்கப்படவில்லை.

துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக ஏற்கனவே கசுன் ராஜித அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், நிரோஷன் டிக்வெல்ல, மதீஷ பதிரண மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் புதன்கிழமை இரவு (26) அவுஸ்திரேலியாவுக்கு புறப்படவுள்ளனர். எனவே, இந்த இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் அணியில் இணைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி தங்களுடைய அடுத்தப்போட்டியில் எதிர்வரும் 29ம் திகதி நியூசிலாந்து அணியை சிட்னியில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<